தாமிரபரணியில் 57 இனங்களை சேர்ந்த 8,256 பறவைகள்: கணக்கெடுப்பில் தகவல்
தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் 57 இனங்களை சேர்ந்த 8,256 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கணக்கெடுப்பு விவரங்கள் குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன் கூறியதாவது:
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 7-வது தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடை பெற்றது. மணிமுத்தாறு அகத்திய மலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், தூத்துக்குடி முத்து நகர் இயற்கை சங்கம், நெல்லை இயற்கை சங்கம் சார்பில் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது.
எண்ணிக்கை குறைவு
சுமார் 55 தன்னார்வலர்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து 42 குளங்களில் கணக்கெடுப்பு நடத்தினர். வடகிழக்கு பருவமழை பொய்த்த காரணத்தால் குளங்கள் வறண்டு காணப்பட்டன. பறவைகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தன.
எனவே ஓரளவு நீர் தேங்கி இருக்கக்கூடிய மணிமுத்தாறு நீர்த்தேக்கம், கடனா நதி நீர்த் தேக்கம் மற்றும் அதை ஒட்டிய மேலும் 3 குளங்கள் இக்கணக் கெடுப்பில் இணைத்துக்கொள்ளப் பட்டன.
இவ்வருட கணக்கெடுப்பில் ஊசிவால் வாத்து, நீலச்சிறகு வாத்து, சில்லி தாரா, மூக்கன் தாரா, நீர்காகம், கொக்கு, அரிவாள் மூக்கன், ஆலா என 57 இனங்களை சார்ந்த சுமார் 8,256 பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாத்தினங்கள் அதிகம்
மணிமுத்தாறு அணையில் 2,863 பறவைகள், ஆழ்வார்குறிச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ள குளத்தில் 1,460 பறவைகள், புத்தான்தருவை குளத்தில் 703 பறவைகள், துப்பாகுடி குளத்தில் 437 பறவைகள் மற்றும் திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தில் 364 பறவைகள் பதிவு செய்யப்பட்டன.
அதிகபட்சமாக 3,911 வாத்து இன பறவைகள், 1,341 கொக்கின பறவைகள் மற்றும் 1,247 உள்ளான் இனப் பறவை கள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டுகளில் நடை பெற்ற கணக்கெடுப்பில் வைகுண்டம் பகுதியில் உள்ள குளங்களில் அதிக பறவைகள் காணப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு அக்குளங்களில் பறவை களின் எண்ணிக்கை குறைந்து மொத்தம் 571 (12 குளங்கள்) பறவைகள் மட்டுமே காணப்பட்டன.
பறவைகளின் புகலிடம்
மணிமுத்தாறு அணையில் மிதமான அளவு தண்ணீர் இருப்ப தால் அங்கு பறவைகளின் எண்ணிக்கை ஓரளவு காணப் பட்டது. கடனா அணையில் மதகுகள் பராமரிப்புக்காக நீர் வெளியேற் றப்பட்டு அந்நீர் ஆழ்வார்குறிச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ள தெப் பக்குளம் மற்றும் அதையொட் டிய குளத்தில் தேக்கி வைக்கப் பட்டுள்ளது. இதனால் அக்குளத்தில் அதிக எண்ணிக்கையில் (1,460) பறவைகள் காணப்பட்டன.
அக்குளத்தில் வலசை வரும் வாத்தினமான நீலச்சிறகு வாத்து 280-ம், உள்ளூர் வாத்தினங்களான மூக்கன் தாரா 500, சில்லி தாரா 200 பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மழை பொய்த்த வருடங்களில் சிறிய குளங்களில் ஓரளவு தண்ணீர் இருக்கும் பட்சத்தில் அக்குளங்கள் பறவைகளுக்கு புகலிடமாக திகழும் எனத் தெரிய வருகிறது என்றார் அவர்.
‘குடி’மகன்களின் கூடாரமான குளங்கள்
“கணக்கெடுப்பு நடைபெற்ற பெரும்பாலான குளங்களை சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளன. குளங்கள் தூர்வாரப்படவில்லை. குப்பைக் கிடங்குகளாக காட்சி அளிக்கின்றன. ‘குடி’மகன்களின் கூடாரமாகவும் இருந்துள்ளன. மதுபாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்துள்ளன. குறிப்பாக திருநெல்வேலி டவுன் நயினார் குளம், குப்பைகளின் கூடாரமாகவே உள்ளது. பாட்டில், பாலித்தீன் துகள்களை பறவைகள், மீன்கள் உட்கொண்டு பலியாகும் அபாயம் உள்ளது. இக்குளங்களில் இருந்து பெறப்படும் மீன்களை உட்கொள்வதால் மனித உயிருக்கும் ஆபத்து உள்ளது” என்று பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன் தெரிவித்தார்.
நன்றி : தி இந்து தமிழ்