திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது
சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததை தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை அ.தி.மு.க. கட்சியின் தலைவராக (முதல்–அமைச்சர்) எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி, தான் முதல்–அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்ட தகவலை தெரிவித்து ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். புதிய அரசு அமைக்க வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். அத்துடன், சட்டசபையில் 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு அவரை கவர்னர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தின் புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். அவருடன் செங்கோட்டையன் உள்பட 30 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். எடப்பாடி பழனிசாமி, மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக நாளை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுவதையொட்டி திமுக ஆலோசனை நடத்துகிறது. திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது செயல்பட வேண்டிய நிலை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
நன்றி : தினத்தந்தி