அரசியலுக்கு வர எனக்குப் பயமாக உள்ளது: கமல்
அரசியலுக்கு வர எனக்குப் பயமாக இருக்கிறது. நான் மிகவும் கோபக்காரன். இந்தியாவுக்கு என் போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம் என்று கமல் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நிலவிவுள்ள மாற்றத்துக்கு ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதங்கத்தை அனுப்புமாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார் கமல். இதற்கு சமூகவலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அரசியல்வாதிகளை கடுமையாக சாடியுள்ளார் கமல். அப்பேட்டியில் அவர் பேசியது, “அரசியல்வாதிகள் மீது விருப்பமும் வெறுப்பும் ஒரு சேர மக்களிடையே உருவாகியுள்ளதை வீதியில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இது அச்சம் தரக்கூடியதாக உள்ளது.
இரண்டு கட்சிகளுமே மக்களைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால் உண்மையில், மக்கள் அங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களா? ‘மக்களின் வாக்குகளால் நான் வெற்றி பெற்றுள்ளேன்’ என்று சொன்னவர்கள் எல்லாம், எவ்வளவு தூரம் மக்களை முன்னிறுத்தினார்கள்?. தேர்தல் முடிந்தவுடன் ஆளே மாறிவிடுகிறார்கள்.
இதுசார்ந்த கோபம் சில காலமாகவே மக்களிடம் உயர்ந்து வருகிறது. நான் அரசியலற்றவனாக இருக்கிறேன். நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஊழலுக்கு எதிரான என்னுடைய கசப்புணர்வை நான் எப்போதும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் நான் ‘குற்றப் பின்னணி கொண்ட கும்பல்’ என்று சொன்னபோது, அதை அரசியல் சார்பு இல்லாத ஒருவனின் கோபமாகக் கருதப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அதை உறுதிப்படுத்தியுள்ளது. சசிகலா மட்டுமல்ல மறைந்த முன்னாள் முதல்வரும் குற்றவாளிதான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையை சுத்தம் செய்ய வேண்டும். மாறாகப் பரிசோதிக்கக் கூடாது. எனவே மறுதேர்தல் நடத்த வேண்டும். இப்போது மக்கள் தங்கள் கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. காரணம் தற்சமயம் கவுன்சிலர்கள், எம்எல்ஏக்கள் மூலமாகப் பேச வேண்டியுள்ளது.
மறுதேர்தல் வைத்தால் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக மக்கள் உணர்த்துவார்கள். மறுதேர்தல் என்பது மக்களுக்குச் செலவு வைக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் என்ன செய்ய? தரையில் பாலைக் கொட்டிவிட்டோம். அதைச் சுத்தம் செய்ய வேண்டும். எனவே மறுதேர்தல் வைத்து மீண்டும் பால் கறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசியலுக்கு வர எனக்குப் பயமாக இருக்கிறது. ஏனென்றால், நாம் வேறுவிதமான சிந்தனைகளை உடைய மக்கள். இந்தியாவுக்கு இப்போதிருக்கும் அரசியல் தேவை இல்லை. நான் மிகவும் கோபக்காரன். இந்தியாவுக்கு என் போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம். நல்ல சமநிலை உடைய மனிதர்கள்தான் அரசியலுக்குத் தேவை. நான் எப்படி கோபமாக இருக்கிறேனோ, அதே போலத்தான் மக்களும் இருக்கிறார்கள்.
நல்ல அரசியல்வாதிகளைத் தேடிப் பாருங்கள். அத்தகைய மனிதர்களை எல்லா நேரமும் சட்டமன்றத்திலோ அல்லது நாடாளமன்றத்திலோ காண முடியாது. சில சமயம் வீதியில்கூட அத்தகைய மனிதர்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.
மெரினாவில் நடந்தது போன்று இன்னுமொரு திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறை நிகழ்ந்தால், நிச்சயம் மக்கள் கொந்தளித்து விடுவார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படும் வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஜெர்மனியில் சோஷலிஸ்ட் கட்சி எப்படி ஆட்சியைப் பிடித்தது என்பது நமக்கு நினைவில் இருக்கும். அது எல்லாமே ஜனநாயக முறைப்படி நடந்தது. அங்கு எப்போது ஒரு சர்வாதிகாரி வந்தான் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் அவன் அங்கு, அவர்களோடேதான் இருந்தான். அப்போது மக்கள் சொன்னார்கள்: “தவறுதலாக ஹிட்லர் இங்கு வரவில்லை!”” என்று பேசியுள்ளார் கமல்.
நன்றி : தி இந்து தமிழ்