உத்தரபிரதேச சட்டசபைக்கு நடந்த 3–ம் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு
உத்தரபிரதேச சட்டசபைக்கு நடந்த 3–வது கட்ட தேர்தலில் 61 சதவீத ஓட்டுகள் பதிவானது.
3–ம் கட்ட தேர்தல்
403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 3–ம் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 69 தொகுதிகளுக்கு தேர்தல் நேற்று நடந்தது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாடி–காங்கிரஸ் கூட்டணி, பா.ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
69 தொகுதிகளிலும் 25,603 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 205 பெண் வேட்பாளர்கள் உள்பட 826 பேர் களத்தில் உள்ளனர். மொத்த வாக்காளர்கள் 2 கோடியே 41 லட்சம் ஆகும். பாதுகாப்புக்காக 837 கம்பெனி துணை ராணுவத்தினர் உள்பட 2 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
விறுவிறுப்பு
முக்கிய வேட்பாளர்களில் சமாஜ்வாடி தலைவர் சிவபால் சிங், ஜஸ்வந்த் நகர் தொகுதியில் களத்தில் உள்ளார். லக்னோ கன்டோன்மெண்ட் தொகுதியில் முதல் –மந்திரி அகிலேஷ் யாதவின் மைத்துனி அபர்ணா பா.ஜனதா தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷியுடன் மோதுகிறார். அகிலேஷ் யாதவின் இன்னொரு உறவினர் அனுராக் (சரோஜினி நகர்) மற்றும் சமாஜ்வாடியின் மந்திரிகள், இதர கட்சிகளின் மூத்த தலைவர்களும் களம் காண்கின்றனர்.
கான்பூர், லக்னோ, எட்டவா நகரங்களில் ஓட்டுப் பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்குச் சாவடிகளில் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். கிராமங்களில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியபோது, மந்தமாகவே இருந்தது. பிற்பகலில் விறுவிறுப்பு அடைந்தது.
பல இடங்களில் மின்னணு எந்திர கோளாறு காரணமாக ஓட்டுப் பதிவு சற்று தாமதமாக தொடங்கியது.
61 சதவீதம்
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் லக்னோ நகரில் ஓட்டுபோட்டனர். முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் எட்டவா நகரில் வாக்குப் பதிவு செய்தார். ஆங்காங்கே கட்சி தொண்டர்கள் இடையே நடந்த ஒரு சில மோதல்கள் தவிர மாநிலத்தில் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது.
மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்தபோது மொத்தம் 61 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
நன்றி : தினத்தந்தி