கவர்னர் வித்யாசாகர் ராவுடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு
நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
ஆனால், வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கோரி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது, சபாநாயகரின் மேஜை தூக்கி வீசப்பட்டது. மைக்கும் உடைக்கப்பட்டது. கடும் அமளி ஏற்பட்டதால், சட்டசபை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க. உறுப்பினர்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார்.
மு.க.ஸ்டாலின் கைதாகி விடுதலை
அதன்பிறகு, தி.மு.க. உறுப்பினர்கள் ஒவ்வொருவராக குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சட்டை கிழிந்த நிலையில், மு.க.ஸ்டாலின் வெளியேறினார்.
அதன்பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முறையிட்டனர். பின்னர், மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து ‘தர்ணா’ போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
இந்த நிலையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி என்.சிவா ஆகியோர் நேற்று காலை 11.20 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்கள். அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கவர்னரிடம் கூறிய அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய கடிதத்தையும் அவரிடம் வழங்கினார்கள்.
அந்த கடிதத்தில், நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இல்லை என்றும், எனவே அரசியலமைப்பு சட்டப்படி உரிய நீதி வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருச்சி என்.சிவா எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சட்ட விரோதம்
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடைபெற்ற வன்முறைகள் குறித்து கவர்னரிடம் விளக்கி கூறினோம். மேலும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லாத போது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு சட்ட விரோதமானது. அதேபோன்று காவல்துறையினர் சட்டசபை காவலர்கள் உடையில் உள்ளே புகுந்து தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றி இருக்கிறார்கள். இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல். இதுகுறித்து கவர்னரிடம் தெரிவித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
தி.மு.க. எம்.பி.க்கள் அங்கிருந்து சென்ற பிறகு, மதியம் 12.20 மணிக்கு முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களான மதுசூதனன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி ஆகியோருடன் சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.
அப்போது, சட்டசபையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வுகள் குறித்தும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தது குறித்தும் புகார் அளித்தனர். மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கவர்னரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
சந்திப்பு முடிந்து தனது ஆதரவாளர்களுடன் வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், கவர்னர் மாளிகை அருகே நின்ற நிருபர்கள் பேட்டி காண முயன்றனர். ஆனால் அவர் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி
முன்னதாக, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 10.45 மணி அளவில் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் சென்று இருந்தனர்.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது, சட்டசபையில் நடந்த அமளி பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்கி கூறியதோடு, அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய சி.டி.யையும் ஆதாரமாக ஒப்படைத்தார்.
மும்பை சென்றார்
மராட்டிய மாநில கவர்னரான வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி தீவிரம் அடைந்த நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த 9–ந் தேதி மும்பையில் இருந்து சென்னை வந்தார். அரசியல் பரபரப்புகள் ஓய்ந்த நிலையில், நேற்று அவர் மும்பை புறப்பட்டு சென்றார்.
இதற்காக நேற்று மதியம் 12.43 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து காரில் சென்னை விமான நிலையம் சென்ற அவர், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மும்பை சென்றார்.
நன்றி : தினத்தந்தி