ஐபிஎல் ஏலம் 2017: இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அதிக மவுசு
ஐபிஎல் 2017ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவில் திங்கட்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக 4-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஏலம், பிசிசிஐ நிர்வாகத்தில் நடந்த சில மாற்றங்களால் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஏறக்குறைய 350 வீரர்கள் இந்த ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் 27 வீரர்கள் இருக்கலாம். அதில் 9 பேர் கண்டிப்பாக மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மொத்தம் 8 அணிகள் இந்த ஏலத்தில் பங்கேற்கின்றன.
அதிகபட்சமாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.23.35 கோடி செலவு செய்யலாம். குறைந்தபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 11.5 கோடி மட்டுமே செலவு செய்ய முடியும். 14 வீரர்களே இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஏலத்தில் அதிக வீரர்களை வாங்கும் எனத் தெரிகிறது.
பென் ஸ்டோக்ஸ் சாதனை
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ. 14.5 கோடிக்கு புனே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ரூ. 2 கோடியில் ஆரம்பித்த இந்த ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. மும்பை, பெங்களூரு அணிகள் ஆரம்பத்தில் போட்டியிட்டன. பின் டெல்லி அணி ஏலம் கேட்க ஆரம்பித்தது. தொடர்ந்து பஞ்சாப், ஹைதராபாத் அணிகளும் ஏலம் கேட்க ஆரம்பித்தன. கடைசியில் புனே அணி ரூ. 14.5 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் தனது பணத்தில் பெரும்பங்கை ஒரு வீரருக்காக புனே அணி செலவழித்தது. சர்வதேச வீரருக்கு ஐபிஎல் ஏலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச தொகை இது. இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் ரூ. 9.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.
24 மடங்கு அதிக விலைக்குப் போன இங்கிலாந்து வீரர்
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் ரூ. 12 கோடிக்கு பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது அவரது அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திலிருந்து 24 மடங்கு அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தி இந்து தமிழ்