தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ரோந்து: சீன வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்
தென் சீனக் கடலில் அமெரிக்காவின் 2 போர்க்கப்பல்கள் புதிதாக ரோந்து பணியில் இணைந்துள்ளது. இதற்கு சீன வெளியுறவு அமைச் சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக சீனாவுக்கும் வியட்நாம், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. தென் சீனக் கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ள சீன ராணுவம் அங்கு விமானப் படை தளத்தையும் அமைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அமெரிக்கா, தென் சீனக் கடல் சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று வாதிட்டு வருகிறது. மேலும் அந்த கடல் பகுதியில் கடந்த 2015 முதல் அமெரிக்க கப்பல்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் புதிதாக 2 போர்க்கப்பல்களைத் தென் சீனக் கடல் பகுதிக்கு அமெரிக்க கடற் படை அனுப்பியுள்ளது. யு.எஸ்.எஸ்.கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் வெய்னி இ-மேயர் என்ற போர்க்கப்பல் ரோந்து பணியில் இணைந்துள்ளன.
சீன ராணுவம் உருவாக்கியுள்ள செயற்கை தீவுகளுக்கு அருகில் சுமார் 12 கடல் மைல் தொலைவில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடும் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச கடல் எல்லையை சீனா மதிக்கிறது. அதே நேரம் சீன எல்லைக்குள் யாரும் நுழைய முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து தமிழ்