பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு: பாஜக தாமரை சின்னத்தை முடக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
உத்தரப் பிரதேசத்தின் பத்தேபூர் மாவட்டத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ‘‘ரம்ஜான் பண்டிகையின் போது மின்சாரம் இருந்தால், தீபாவளி பண்டிகையின்போது கண்டிப்பாக மின்வெட்டு இருக்கக் கூடாது.
இதில் எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது. ஒரு கிராமத்தில் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்காக நிலம் ஒதுக்கப் பட்டால், தீயிட்டு கொளுத்துவதற் கும் நிலம் ஒதுக்கப்பட வேண்டும்.
பொதுமக்களை ஜாதி மற்றும் மத ரீதியாக பிரித்து வைக்கக் கூடாது’’ என்றார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் மற்றும் சட்ட விவகார செயலாளர் கே.சி.மிட்டல் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக வன்மையான நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி யுள்ளோம். பாஜகவின் தாமரை சின்னத்தை முடக்கி வைத்து, அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி ஏற்கெனவே பலமுறை புகாரும் அளித்திருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அரசமைப்பு அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்தும் என நம்புகிறோம். மேலும் தேர்தல் சுமூகமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கே.சி.மிட்டல் கூறினார்.
நன்றி : தி இந்து தமிழ்