Breaking News
சட்டசபையில் நடந்த மோதலை கண்டித்து தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் திருச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்

திருச்சியில் நடைபெற்றஉண்ணாவிரதத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சனிக்கிழமை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது மோதல் சம்பவங்கள் நடைபெற்றன.

தி.மு.க. உண்ணாவிரதம்

சட்டசபையில் நடந்த ஜனநாயக படுகொலையை கண்டித்தும், சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்தும் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நேற்று உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின்

திருச்சியில், தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

திருச்சி சிவா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்தர பாண்டியன் மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் இதில் பங்கேற்றனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர்.சி.பாபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

சென்னை

சென்னை நகரில் வள்ளுவர் கோட்டம், ஆதம்பாக்கம், தங்கசாலை, ஆர்.கே.நகர் ஆகிய இடங்களில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடந்தது.

வள்ளுவர் கோட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் துர்கா ஸ்டாலின், கருணாநிதியின் மகள் செல்வி, மகன் மு.க.தமிழரசு, பேரன் அருள்நிதி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, முன்னாள் எம்.பி. ஜெயதுரை, எம்.எல்.ஏ. மோகன் மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் எச்.வசந்தகுமார், நாசே.ராமச்சந்திரன், பீட்டர் அல்போன்ஸ், கராத்தே தியாகராஜன், கோபண்ணா ஆகியோரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

ஆதம்பாக்கத்தில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையிலும், தங்கசாலையில் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமையிலும், ஆர்.கே.நகரில் வடசென்னை மாவட்ட செயலாளர் சுதர்சனம் தலைமையிலும் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

தீக்குளிக்க முயற்சி

இதேபோல் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சதீஷ் குமார் (வயது 40) என்ற தி.மு.க. பிரமுகர் உடல் முழுவதும் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார். சட்டசபையில் மு.க.ஸ்டாலினை அவமதித்ததை கண்டித்து தீக்குளிக்கப்போவதாக கூறினார். உடனே போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தினார்கள்.

இதுபோல காஞ்சீபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது குணசேகரன் (58) என்ற தொண்டர் தீக்குளிக்க முயன்றார். அவரை தி.மு.க.வினர் தடுத்து காப்பாற்றினார்கள்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.