Breaking News
‘சிசேரியன்’ முறையில் குழந்தை: இரண்டாம் இடத்தில் தமிழகம்

”தகுந்த மருத்துவ காரணம் இன்றி, ‘சிசேரியன்’ எனப்படும், குழந்தை பிறப்புக்கான அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்களின் பெயர்களை வெளியிட்டு, அவர்களை அவமதிக்க வேண்டும்,” என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா கூறியுள்ளார்.

புகார்கள்:

இயற்கையாக குழந்தை பிறப்பதை தவிர்த்து, சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ‘சேஞ்ச்.ஆர்க்’ இணையதளத்தில் புகார்கள் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், மேனகா, இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஜே.பி.நட்டாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

போராட வேண்டும்:

இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் மேனகா கூறியதாவது: தகுந்த மருத்துவ காரணங்கள் இன்றி, கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்டர்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது. சட்டவிரோதமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்களின் பெயர்களை பொது வெளியில் தெரிவித்து, அவர்களை அவமானப்படுத்த வேண்டும்.

சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை விகிதத்தை, அனைத்து மருத்துவமனைகளிலும், போர்டுகளில் எழுதி வைத்திருப்பதை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கட்டாயமாக்க வேண்டும். நாடு முழுவதும், பெண்கள் அனைவரும், சட்டவிரோதமான சிசேரியன் சிகிச்சைக்கு எதிராக ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகம் 2வது இடம்:

நாட்டிலேயே அதிகமாக, தெலுங்கானாவில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 58 சதவீத குழந்தைகள், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கின்றன. அடுத்ததாக, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 34.1 சதவீத குழந்தைகள், சிசேரியன் மூலம் பிறக்கின்றன.

தெலுங்கானாவில், தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளில், 74.9 சதவீதம், சிசேரியன் முறையில் பிறக்கின்றன. மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளில், 70.9 சதவீதம், சிசேரியன் முறையில் பிறக்கின்றன.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.