ஜெயலலிதா பிறந்த நாள் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் முதல்வர் தொடங்கி வைத்தார்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை இன்று தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
ஜெயலலிதா மரணம் அடைந்து சுமார் இரண்டரை மாதமே ஆகியுள்ள நிலையில், அவரது பிறந்த தினத்தையட்டி அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே அவரது உருவப்படத்தை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தினார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் அ.தி.மு.க. வினர் அன்னதானம் செய்தனர்.
தமிழக அரசு சார்பிலும் ஜெயலலிதாவின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இன்று ஜெயலலிதாவுக்கு 69-வது பிறந்த தினம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் மரக் கன்றுகள் பெறப்பட்டுள்ளது. அவற்றை நடுவதற்கான தொடக்க விழா இன்று காலை 9 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா வில் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதற்கு அடையாளமாக அவர் ஒரு மரக்கன்றை நட்டார்.அது மட்டுமின்றி சென்னையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதற்கான மரம் நடும் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
விழாவில் தலைமை செயலாளர் கிரிஜா வைத் தியநாதன், சுற்றுச்சூழல் மற் றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண் டனர்.
நன்றி : தினத்தந்தி