புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை வெளியிடுவதை ஜெயலலிதா விரும்பவில்லை ஐகோர்ட்டில் அப்பல்லோ ஆஸ்பத்திரி விளக்கம்
ஜெயலலிதாவின் விருப்பத்தின் அடிப்படையில் தான், அவரது உடல் நிலை குறித்தும், சிகிச்சை குறித்தும் விவரங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டது என்றும் சிகிச்சை பெறுவது போன்ற தன்னுடைய புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை வெளியிடுவதை அவர் விரும்பவில்லை என்றும், சென்னை ஐகோர்ட்டில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
நீதிபதியின் சந்தேகம்
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் பி.ஏ.ஜோசப். அ.தி.மு.க. தொண்டரான இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து பொதுமக்களுக்கு பலவிதமான சந்தேகங்கள் உள்ளன. எனவே, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து, ஜெயலலிதாவின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை முதலில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் விசாரித்தார்கள். அப்போது, ‘ஜெயலலிதாவின் மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் உள்ளது’ என்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கருத்து கூறினார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
3 கேள்விகள்
பின்னர், இந்த வழக்குகள் கடந்த ஜனவரி 9-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் 3 கேள்விகளை எழுப்பினார்கள்.
அதாவது, இந்த வழக்கை தொடர மனுதாரர்களுக்கு அடிப்படை உரிமை உள்ளதா? ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் சந்தேகம் எதுவும் உள்ளதா? அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தலாமா? என்ற 3 கேள்விகளுக்கு விடை காணவேண்டியதுள்ளது என்று நீதிபதிகள் கூறினார்கள்.
பின்னர், இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குனர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அனுமானங்கள்
இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் சார்பில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் இந்த வழக்கை, காதில் கேட்ட தகவல்களின் அடிப்படையிலும், அனுமானங்களின் அடிப்படையில் தொடர்ந்துள்ளார். மனுதாரர் கேட்பதை போல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கத் தேவையில்லை. காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு செம்டம்பர் 22-ந் தேதி இரவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
கவர்னர்
அவசர பிரிவில் வைத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை வழங்கினார்கள். பின்னர், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் இருந்து பிசியோதரபி நிபுணர்களும், லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் பீலே என்பவரும், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்களும் நேரில் வந்து சிகிச்சை வழங்கினார்கள்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டது. தமிழக கவர்னரும் இருமுறை ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து விவரங்களை கேட்டறிந்து, அறிக்கை வெளியிட்டார்.
சந்தேகம் இல்லை
ஜெயலலிதாவுக்கு உயர்தர சிகிச்சை, முறையாக வழங்கப்பட்டும், கடந்த டிசம்பர் 5-ந் தேதி அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் இறந்தார். இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நோயாளியின் உடல் நலம் குறித்த முழு விவரங்களையும் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட முடியாது. எனவே, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையிலும், மரணத்திலும் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அந்தரங்கம்
இதேபோல, அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், அப்பல்லோ ஆஸ்பத்திரியின் சட்டப்பிரிவு மேலாளர் எஸ்.எம்.மோகன்குமார் கூறியிருப்பதாவது:-
நோயாளிகளின் ரகசியத்தையும், அந்தரங்கத்தையும் காக்க வேண்டிய கடமை ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு உள்ளது. மருத்துவம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் நோயாளிகளின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது. அல்லது, அரசு மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகள் இல்லாமல் வெளியிட முடியாது.
இந்த வழக்கில் மனுதாரர் எங்களது ஆஸ்பத்திரிக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளையும், கருத்துகளையும் முற்றிலுமாக மறுக்கிறோம்.
சிகிச்சை ரகசியம்
ஊடகங்களில் வெளியான தகவல்கள், அரசியல் தலைவர்களின் அறிக்கைகள், சமூக வலைதளங்களில் வெளியான புரளிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் விதியின்படி, மருத்துவ சிகிச்சை தொடர்பான விவரங்கள் ரகசியமாக காக்கப்படவேண்டும்.
உலக அளவிலான ஆஸ்பத்திரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் சர்வதேச கூட்டு ஆணையம் (ஜே.சி.ஐ.) என்ற அமைப்பில் அப்பல்லோ ஆஸ்பத்திரி உறுப்பினராக உள்ளது. அந்த அமைப்பின் விதிகளின்படி, நோயாளிகளின் தனிப்பட்ட உணர்வுகளுக்கும், சுதந்திரத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும். இதன்படி, ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஆகிய விவரங்களை வெளியிடவில்லை.
ஜெயலலிதாவின் விருப்பம்
அதேநேரம், ஜெயலலிதாவின் விருப்பத்தின் அடிப்படையில், அவரது உடல் நிலை குறித்தும், சிகிச்சை குறித்தும் விவரங்கள் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது அறிக்கையாக ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டது. அதேநேரம், சிகிச்சை பெறுவது போன்ற தன்னுடைய புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை வெளியிடுவதை ஜெயலலிதா விரும்பவில்லை.
அதேநேரம், அவர் குணமடைந்து வருவது தொடர்பான நல்ல விஷயங்களை மட்டும் வெளியிட்டோம். அதுவும் அரசின் வேண்டுகோளின் அடிப்படையிலும், பொது அமைதியை காக்கவும், யூகங்கள், புரளிகள், வதந்திகளை தடுக்கவும் அந்த தகவல்கள் வெளியிடப்பட்டன.
பொய் இல்லை
எங்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம், மருத்துவதுறையின் நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்பட்டது. ஜெயலலிதாவுக்கு ஆரம்பகட்டத்தில் சிகிச்சை வழங்கப்பட்டபோது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், டிசம்பர் 4-ந் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கு பலனின்றி அவர் டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். எங்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் எந்த ஒரு தருணத்திலும், பத்திரிகைகளுக்கு பொய்யான தகவல்களை கொண்ட செய்திக்குறிப்பை வெளியிடவில்லை.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டால், தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரேவிதமான பதில்
இந்த பதில் மனுக்களையும் நீதிபதிகள் படித்து பார்த்தனர். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘தமிழக அரசும், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமும் ஒரேவிதமான பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது’ என்று குற்றம் சுமத்தி வாதிட்டார்.
அதேபோல, மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசின் வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 13-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
நன்றி : தினத்தந்தி