எச்.பி.சி.எல். நிறுவனத்தைக் கையகப்படுத்துகிறது ஓ.என்.ஜி.சி.?
நாட்டின் மூன்றாவது பெரிய எரிபொருள் நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தை (எச்.பி.சி.எல்.) ஓ.என்.ஜி.சி. ரூ. 44,000 கோடிக்கு கையகப்படுத்தும் வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
ஒருங்கிணைந்த எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார். இந்த நிலையில், நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு எண்ணெய் எரிபொருள் நிறுவனங்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது, எவற்றை இணைப்பது போன்ற ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சக வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பின்படி, ஒரு பெட்ரோலியம் உற்பத்தி நிறுவனத்துடன், சுத்திகரிப்பு நிறுவனமொன்றை இணைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த வகையில், பல்வேறு வழிமுறைகளை அலசி வருகிறோம்.
நாட்டில் இந்தத் துறையில் அரசுப் பங்குகளுடன் 6 பெரும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்கள் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள். இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்புத் துறையில் பெரும் நிறுவனங்கள். ஓரிடத்திலிருந்து மற்ற இடத்துக்கு எரிவாயுவைக் கொண்டு செல்லும் நிறுவனமாக கெயில் செயல்பட்டு வருகிறது.
பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றை ஓஎன்ஜிசியுடன் இணைப்பது ஒரு வழி. அல்லது பாரத் பெட்ரோலியத்தை தற்போதைக்குத் தனியே செயல்பட விட வேண்டும். இந்தியன் ஆயில் – ஆயில் இந்தியா இணைப்பும் சாத்தியம்.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் – ஓ.என்.ஜி.சி. இணைப்பு சரியாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் தற்போது மத்திய அரசுக்கு 51.11 சதவீதப் பங்கு உள்ளது. இந்தப் பங்கு முழுவதையும் இப்போதைய சந்தை மதிப்பில் ரூ. 29,128 கோடி அளித்து ஓ.என்.ஜி.சி. கையகப்படுத்தும் திட்டம் குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் ஹிந்துஸ்தானின் 26 சதவீதப் பங்குகளை தற்போதைய சந்தை மதிப்பின்படி, ரூ. 14,817 கோடியும் அளித்துக் கையகப்படுத்தலாம். ஆக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்குகளைக் கையகப்படுத்த சுமார் ரூ. 44,000 கோடி தேவைப்படலாம்.
இந்தக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு இரண்டு வகையான ஒப்புதல்களைப் பெற வேண்டும். தனது பங்குகளை முழுமையாகவோ, சிறிய அளவிலோ விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்.
மற்றொரு ஒப்புதல் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்திடம் உள்ள ரொக்க கையிருப்பை பங்குகள் வாங்கப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு முறையான ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டு உருவாகும் நிறுவனமானது, உலகின் மூன்றாவது பெரிய எரிபொருள் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிறுவனமாகத் திகழும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.