ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமல்
ஜூலை 1-ஆம் தேதி முதல் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வரும் என்று மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அவர் மேலும் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும். இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மார்ச் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு மார்ச் 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்டில் ஒப்புதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும். அதே நேரத்தில் மாநில ஜிஎஸ்டி மசோதா, மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்படும்.
மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்வது குறித்த வரைவு மசோதாவுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துவிட்டது. ஜிஎஸ்டியில் 5,12,18,28 சதவீதம் என வரி விகிதங்கள் உள்ளன. இதில் எந்தெந்த பொருள்கள் எந்த வரி விகிதத்துக்குள் வரும் என்பதை மார்ச் 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றார் அவர்.