டோகோமோவுடன் சமரசம்: ரூ.8,000 கோடி அளிக்க டாடா ஒப்புதல்
ஜப்பானைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான என்.டி.டி. டோகோமோவுடன் ஏற்பட்ட விரிசலை சமரசமாகத் தீர்த்துக் கொள்ள 118 கோடி டாலர் (சுமார் ரூ. 8,000 கோடி) அளிக்க டாடா சன்ஸ் ஒப்புக் கொண்டது.
இது தொடர்பாக டாடா சன்ஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: லண்டனில் உள்ள சர்வதேச சமரசத் தீர்ப்பாயத்தில் ஜப்பானின் என்.டி.டி. டோகோமோ நிறுவனத்துக்கு சாதகமாக அளிக்கப்பட்ட இழப்பீட்டுத் தீர்வை ஏற்று செயல்படுத்துவது தொடர்பாக இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும். உலகின் எந்தப் பகுதியிலும் ஏற்பட்ட உடன்படிக்கைகளை நியாயமாக கடைப்பிடிக்கும் டாடா குழுமத்தின் நீண்ட பாரம்பரியத்துக்கு இணங்க, லண்டனில் வழங்கிய தீர்வுக்கு எதிராக டாடா சன்ஸ் எழுப்பிய ஆட்சேபங்களைக் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்காவில் இந்த விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்த ஆட்சேபங்களையும் வாபஸ் பெற டாடா சன்ஸ் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் இரு நிறுவனங்களும் கூட்டாக வாபஸ் மனு தாக்கல் செய்துள்ளோம். லண்டன் சர்வதேச தீர்ப்பாயத்தில் வழங்கிய தீர்வை இரு நிறுவனங்களும் ஏற்கும் வழிமுறைகளை வாபஸ் மனுவில் விளக்கியுள்ளோம். தில்லி உயர் நீதிமன்றம் அதனை ஏற்கும் என நம்புகிறோம்.
சர்வதேச சமரசத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின்படி ஏற்கெனவே 118 கோடி டாலரை (சுமார் ரூ. 8,000 கோடி) நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளோம். உயர் நீதிமன்றம் எங்களது மனுவை ஏற்கும்பட்சத்தில், அந்தத் தொகை என்.டி.டி. டோகோமோ பெயருக்கு மாற்றல் செய்யப்படும் என்று டாடா சன்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொலைத் தொடர்பு சேவை அளித்து வரும் டாடா டெலிசர்வீஸஸ் நிறுவனத்தில், ஜப்பானின் என்.டி.டி.டோகோமோ 26.5 சதவீதம் முதலீடு செய்துள்ளது. டாடா- டோகோமோ கூட்டு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஏற்கெனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி, தனது பங்கை டாடா நிறுவனமே திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜப்பான் நிறுவனம் கூறியது. பங்குகளின் மதிப்பு குறித்தும், இழப்பீடு அளவு குறித்தும் இரு நிறுவனங்களுக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது.
இந்நிலையில், லண்டனில் உள்ள சர்வதேச சமரசத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை ஜப்பானின் என்.டி.டி.டோகோமோ தாக்கல் செய்தது.
’டாடா டெலிஸர்வீஸஸ், டாடா சன்ஸ், என்.டி.டி.டோகோமோ ஆகிய 3 நிறுவனங்களும் ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளபடி, இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தில் ஜப்பான் நிறுவனம் வைத்துள்ள பங்கினை, டாடா திரும்பப் பெற வேண்டும். கையகப்படுத்திய விலையில் பாதித் தொகை அல்லது நியாயமான விலை அளிக்கப்பட வேண்டும். பல சுற்றுப் பேச்சு நடத்தியும், டாடா சன்ஸ் தனது பொறுப்பை நிறைவேற்றாததால், சமரசத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது’ என ஜப்பான் நிறுவனம் தெரிவித்தது.
ஜப்பான் நிறுவனம் வைத்திருந்த பங்குகளின் மதிப்பை 118 கோடி டாலர் என தீர்ப்பாயம் கணக்கிட்டு, அதனை டாடா சன்ஸ் வழங்குமாறு தீர்ப்பளித்தது. அதனை நீதிமன்றத்தில் செலுத்திய டாடா சன்ஸ், தீர்ப்பாயத்தின் முடிவுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்திலும், பிரிட்டன், அமெரிக்காவிலும் வழக்கு தொடுத்தது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக என்.சந்திரசேகரன் பொறுப்பேற்ற பிறகு, இந்த விவகாரத்தில் வழக்குகளை முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.