நெடுவாசல் போராட்டத்திற்கு வணிகர்களும் ஆதரவு: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் தொடங்கியது. ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் நடத்தி வரும் போராட்டம் 14வது நாளாக நீடிக்கிறது. புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை உள்ளிட்ட பல இடங்களிலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, ஒவ்வொரு கிராம மக்களும் பங்கேற்கும் வகையில் தொடர் போராட்டம் நடத்துவது, போராட்டக்குழு ஆலோசனைக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணிகர்களும் தங்களுடைய கடைகளை இன்று ஒருநாள் அடைத்து, இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொருத்தவரை கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமான கடைகள் இருக்கின்றன. புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட ஊர்களில் இருக்கின்ற கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டது.
ஆய்வுக்காக என்று நிலத்தை குத்தகைக்கு பெற்ற ஓஎன்ஜிசி நிறுவனம் தற்போது அபாயகரமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயல்வதாக நில உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் கசிவால் புற்றுநோய் ஏற்படுவதாக அச்சம் நிலவுகிறது. வாழ்வாதாரத்தை அழிக்கும் எந்த ஒரு திட்டமும் தங்களுக்கு தேவையில்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே டெல்லி சென்று திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவதற்காக நெடுவாசல் போராட்டக் குழுவினர் 9 பேர் கொண்ட குழு சென்னைக்கு வந்துள்ளன.
அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளனர். சென்னைக்கு புறப்படுவதற்கு முன் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கணேஷ்,. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போராட்டக் குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்பது போராட்டக்காரர்களின் நிலைப்பாடாக உள்ளது.