மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பத்திலான புதிய மின்சார கார் சென்னையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் (எலெக்ட்ரிக் பிரிவு) தலைமைச் செயல் அதிகாரி மகேஷ் பாபு தெரிவித்ததாவது:
மஹிந்திரா நிறுவனம், வாடிக்கையாளர்களின் நகர்ப்புற போக்குவரத்துக்கு தேவையான புதிய மின்சார காரை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. பிரத்யேக வடிவமைப்பைக் கொண்ட “ஈ2ஓப்ளஸ்’ என்ற இந்த புதிய மின்சார கார் மிக குறைந்த அளவே கார்பனை வெளியிடும். இதனால், சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது வெகுவாக கட்டுப்படுத்தப்படும். பிரேக்கை அழுத்தும்போது பொழுது இழந்த எரிபொருளில் ஒரு பகுதியைத் திரும்பப் பெறுவது, பின்பக்க கேமரா, மலைப்பாங்கான இடங்களில் பாதுகாப்பான பயணத்துக்கான தொழில்நுட்பம் உள்ளிட்டவை இந்த மின்சார காரில் இடம் பெற்றுள்ளன.
இந்த கார் பேட்டரியை எளிதில் சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும். காரில் உள்ள பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலம் 140 கி.மீ. வரை செல்லலாம். மணிக்கு அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்தில் இந்த மின்சார காரை இயக்கலாம். மின்சார கார் பிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த கார் ஒரு வரப்பிரசாதமாகும். இதன் விலை மாடல்களுக்கு ஏற்ப ரூ.7.70 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. கோரல் புளூ, ஸ்பார்கிளிங் ஒயின், ஆர்க்டிக் சில்வர் மற்றும் சாலிட் ஒயிட் ஆகிய நான்கு கண்கவர் வண்ணங்களில் இந்த மின்சார கார் கிடைக்கும் என்றார் அவர்.