Breaking News
மாநில நதிகளை இணைப்போம்!

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் ஆந்திர மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. இது போலவே பவானி ஆற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகளையும் பாம்பாற்றின் குறுக்கே அணைக்கட்டு ஒன்றையும் கேரள மாநில அரசு கட்டி வருகிறது.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் ஆந்திர அரசை எதிர்த்தும் பவானி மற்றும் பாம்பாற்றின் குறுக்கே அணைகள் கட்டும் கேரள அரசை எதிர்த்தும் தமிழக விவசாயிகளும் அனைத்து அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
வழக்கம்போல தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது; நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றில் சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. நமது அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் அவர்கள் மாநிலத்திற்குட்பட்ட நதி நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், பாசனப்
பகுதியை அதிகரிக்கவும், புதிய குடிநீர்
திட்டங்கள், மின்னுற்பத்தி திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றவும் திட்டங்களை வகுத்து சிறப்புடன் செயல்பட்டு
வருகின்றன.
நமது மாநிலத்தின் அரசியல்வாதிகள் தமிழகத்தின் நீராதாரங்களையும், நீர்வளங்களையும் மேம்படுத்தவும், நீர்நிலைகளை காப்பாற்றிடவும், திட்டமிட்டு, விரைந்து செயல்படாமல் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறார்கள். காமராஜர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நீர்த்தேக்கத் திட்டங்களுக்கு பிறகு உருப்படியாக ஒரு திட்டம்கூட தமிழக அரசால் செயல்படுத்தப்படவில்லை என்பது வருந்தத்தக்கது.
காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பிரச்னைகளில் நமது நதி நீர் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள பெரும் மக்கள் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் நடத்துவதிலேயே நமது காலம் சென்று கொண்டிருக்கிறது.
இதில் தமிழகத்தின் நதி நீர் உரிமைகளை நாங்கள் தான் நிலைநாட்டுகிறோம் என்று மார்தட்டிக் கொண்டு அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசோடும் எப்போதும் மோதல் போக்கை கடைபிடித்து விளம்பரம் தேடுவதிலேயே நமது ஊர் அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் குறியாக உள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய நதிகளான காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்டதோர் வைகை, பொருணை நதி என மேவிய ஆறு பல ஓட திருமேனி செழித்த தமிழ்நாடு என பாரதியாரால் பட்டியலிடப்பட்ட அனைத்து நதிகளும் மணல் கொள்ளையாலும், ஆலைக் கழிவுகள் கலப்பதாலும், ஆக்கிரமிப்பாலும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு.
கேரள மாநிலத்தில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் அன்றாடம் மணல் கொள்ளை நடந்துகொண்டிருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
சாயக்கழிவுகள், தோல் தொழிற்சாலை கழிவுகள், ஆலைக்கழிவுகள் போன்றவை ஆறுகளில் கலப்பதன் காரணமாக தமிழகத்து ஆறுகள் சாக்கடைகளாக மாறி வருகின்றன. ஆறுகள், குளங்கள், குட்டைகள், வாய்க்கால்கள், நீர்த்தடங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் காரணமாக நமது நீர் ஆதாரங்கள் காணாமல் போகின்றன. இது குறித்தெல்லாம் நமது ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவதில்லை.
ஆந்திர மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு, தனது சொந்தத் தொகுதியான குப்பம் சட்டப்பேரவை தொகுதியின் வறட்சியை போக்கிடவும், ஆந்திர மாநிலத்தில் நீர் வளம் பெருகிடவும், குப்பம் தொகுதியில் உள்ள பெரியதும், சிறியதுமான 116 ஏரிகளை கால்வாய் மூலம் இணைத்து நீர் நிரப்பும் திட்டத்தை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
கிருஷ்ணா நதி நீரிலிருந்து கால்வாய் வெட்டி அதன் மூலம் அப்பகுதியில் உள்ள சிறு சிறு நதிகளை இணைத்தும், குப்பம் தொகுதி வரை கிருஷ்ணா நதி நீரை கொண்டு செல்கிறார். தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஆந்திரம் மற்றும் தமிழ்நாடு இணைந்து தீட்டிய திட்டம் தெலுங்கு கங்கை திட்டம். இத்திட்டம் நிறைவேறிட தமிழகமும் மூன்றில் ஒரு பங்கு தொகையை வழங்கியது.
இத்திட்டத்தின் மூலம் ஆந்திர மாநிலத்திலும் பாசன பகுதிகள் பெருகின. இத்திட்டத்தின் நிறைவாக சத்திய சாய்பாபா 180 கோடி உதவி செய்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவந்தார்கள். ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட நதி நீர் இணைப்பு திட்டங்கள், நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றில் ஆந்திர அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதேபோல கேரள மாநில அரசு அட்டப்பாடி பகுதியிலும் இடுக்கி மாவட்டத்திலும் பல்வேறு அணைகள் கட்டும் திட்டங்களையும், நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் மின் உற்பத்தி திட்டங்களையும் தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது. தனது பாசன பரப்பை அதிகரித்து வருகிறது. குடிநீர் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஆறுகளையும், நீர் வளங்களையும் பாதுகாப்பதில் கருமமே கண்ணாக செயல்பட்டுவருகிறது.
தமிழகத்தில் நீராதாரங்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் சிறப்பான திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. மழை நீர் சேகரிப்பு, தடுப்பணைகள் அமைத்து நீரை தேக்கிவைத்தல், மழை காலங்களில் குளம், குட்டைகளில் நீர் நிரப்பி நீரை தேக்கி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், தமிழகத்திற்குள் ஓடும் நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்றுதல், ஆறு குளம், குட்டைகளை தூர்வாருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாம் மெத்தனம் காட்டி வருகின்றோம்.
தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்க நாம் எவரிடமும் அனுமதி பெற தேவை இல்லை. காத்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. தமிழகத்தில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழக நதிநீர் இணைப்புத்திட்டங்கள் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த நதி நீர் இணைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் மழை
காலங்களில் பெரு வெள்ளம் ஏற்பட்டு பேரழிவுகளை ஏற்படுத்தி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தவிர்த்திருக்கலாம். தமிழகத்து நதிகளை கால்வாய் மூலம் இணைத்து புதிய நீர் தேக்கங்களை அமைக்க வேண்டும். அது மட்டுமே சரியான தீர்வாகும்.
தென் மாவட்டங்கள் பயன் அடையும் வகையில் தாமிர பரணி – கருமேளி ஆறு – நம்பி ஆறு இணைப்புத் திட்டம் பணிகள் தொடங்கி இன்னும் முடிக்கப்படவில்லை. இதனுடன் வெள்ள நீர் தடுப்பு திட்டமான பச்சையாறு, போரையாறு, எலுமிச்சை ஆறு உள்ளிட்ட ஆறு நதிகளை இணைக்கும் திட்டம் மற்றும் கன்னடியன் கால்வாய் திட்டம் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மேலும் கொங்கு மண்டலம் பயன் பெரும் வகையில் பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தில் நல்லாறு, பாம்பாறு இணைப்புத்திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கேரள அரசு ஒரு நீர் திட்டத்தை நிறைவேற்றாமல் நிலுவையில் வைத்து நல்லாறு பாம்பாறு இணைப்புத்திட்டத்தை நடைமுறை படுத்த முடியாமல் தாமதம் செய்து வருகிறது.
இதேபோல பாண்டியாறு – புன்னம்புழா திட்டம் மற்றும் அத்திக்கடவு – அவினாசி திட்டம் ஆகியவை கிடப்பில் உள்ளன. கடந்த முறை மக்கள் போராட்டத்தின் விளைவாக அத்திக்கடவு நீர் திட்டத்தை நிறைவேற்றுவோம் என அரசிதழில் ஆணை வெளியிட்டும் இன்னும் இத்திட்டம் கிடப்பிலேயே உள்ளது.
இதேபோல காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம் இது வரை செயல்படுத்தப்படவில்லை. இந்த நதிநீர் இணைப்புத் திட்டத்தின் மூலம் அக்கினி ஆறு, தென்வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு உள்ளிட்ட ஆறு நதிகளை இணைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும் பாலாற்று பிரச்னைக்கு நிரந்தர தீர்வான தென்பெண்ணை – பாலாறு இணைப்புத் திட்டம் இதனுடன் செய்யாற்றை இணைக்கும் திட்டம் ஆகியவையும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதுபோல நந்தன் கால்வாய் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளன.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. தமிழகம் முழுக்க குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகிறார்கள். வறட்சி நிவாரணம் வழங்குவது நிரந்தரத் தீர்வு அல்ல. தமிழக நதி நீர் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதும், தமிழகத்தில் நீர் ஆதாரங்கள், நீர் வளங்களை மேம்படுத்தும் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதும் மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும்.
தமிழக அரசியல் குழப்பங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும், இதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களைப் போல நாமும் நமது மாநில நதிநீர் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்துவோம்.

கட்டுரையாளர்:
தலைவர், இந்து மக்கள் கட்சி.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.