மீண்டும் நோக்கியா!
புகழ் பெற்ற நோக்கியா செல்லிடப்பேசிகள் உலகெங்கும் மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் சர்வதேச மொபைல்போன் மாநாடு நடைபெற்று வருகிறது. அங்கு நோக்கியா தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜீவ் சூரி தெரிவித்ததாவது: நோக்கியா பெயரில் உருவாக்கப்படும் செல்லிடப்பேசிகளை உலகெங்கும் விற்பனை செய்யும் உரிமையை எச்.எம்.டி. குளோபல் என்னும் நிறுவனம் பெற்றுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கவும், பிரபலமான சில பழைய மாடல்களை மீண்டும் உருவாக்கி விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று தொடுதிரை மாடல்கள் இப்போது அறிமுகமாகின்றன. பிரபல மாடலான 3310 மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ஐரோப்பாவில் 49 யூரோக்களாக இருக்கும். இந்தியாவில் இந்த மாடலின் விலை ரூ. 3,500-ஆக இருக்கும். இதுபோன்ற அடிப்படை மாடலுக்கு உலகம் முழுவதும் தேவை தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும் நவீன தொடுதிரை மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இவை விற்பனைக்கு வரும் என்றார். எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி யூகோ சர்விகஸ் புதிய மாடல்களை அறிமுகம் செய்து கூறியதாவது:
நோக்கியாவின் புதிய 5, 5.2, 5.5 அங்குலத் தொடுதிரை மாடல்கள், ’ரேம்’ திறன், நினைவுத் திறனுக்குத் தக்கபடி, 129 யூரோ (ரூ.9,000) முதல் 299 யூரோ (ரூ.21,000) வரையிலான விலையில் விற்பனைக்கு வரும். ஆண்ட்ராய்டு தளத்தில் இவை இயங்கும் என்றார்.