‘5ஜி’ தொழில்நுட்ப கொள்கை மூன்று மாதங்களில் வெளியாகிறது
இந்தியாவில் புதிய ‘5ஜி’ தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் கூறயியுள்ளார்.
தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறியதாவது:உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில், அகண்ட அலைவரிசை மற்றும் ‘3ஜி, 4ஜி’ தொழில்நுட்ப கொள்கைகளை வகுப்பதில், சற்று தாமதமாகி விட்டது. அதனால், அடுத்த தலைமுறைக்கான, ‘5ஜி’ தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு, கொள்கைகளை விரைவாக உருவாக்குவதில், தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
இந்த தொழில்நுட்பம், பல்வேறு தொழில்களுக்கு பயன்படக் கூடியது. குறிப்பாக, மத்திய அரசின், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், அறிவுசார் நகரங்களை உருவாக்குவதில், ‘5ஜி’ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும். இதை கருத்தில் கொண்டு, இத்தொழில்நுட்பத்துடன், அதிவேக அகண்ட அலைவரிசை கொள்கை உருவாக்கப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களில், மத்திய அரசு, இக்கொள்கையை வெளியிடும்.
தொலை தொடர்புக்கான அடிப்படை கட்டமைப்பு செலவினம், 3,000 கோடி ரூபாயில் இருந்து, 9,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, அடுத்த ஆண்டு, 18 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.