இந்திய பெண் மீது ஓடும் ரெயிலில் இனவெறி தாக்குதல்
அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணத்தில் இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32), கடந்த 22-ந் தேதி மதுபான விடுதி ஒன்றில் வைத்து இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி, கொல்லப்பட்ட அதே நாளில் ஓடும் ரெயிலில் மற்றொரு இந்திய பெண் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பெண், ஏக்தா தேசாய் ஆவார். அவர், நியூயார்க்கில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பணி முடிந்து ரெயிலில் வீடு திரும்பிய வேளையில் அமெரிக்கர் ஒருவர் அவரை இந்தியப்பெண் என தெரிந்து தகாத வார்த்தைகளை சத்தமாய் பேசி இனவெறி தாக்குதல் நடத்தி உள்ளார். ஆனால் ஏக்தா அதை கண்டுகொள்ளவில்லை.
அவருடன் 100-க்கும் மேற்பட்டோர் ரெயிலில் பயணம் செய்தும் யாரும் உதவி செய்ய முன்வரவும் இல்லை. இதையடுத்து அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.
உடனே அவரை அடுத்து அமர்ந்திருந்த ஆசியப்பெண் ஒருவர் மீதும் அவர் இனவெறி தாக்குதல் தொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ், மெட்ரோ அதிகாரிகளை ஏக்தா தொடர்பு கொண்டும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதுகுறித்து அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.