சுற்றுப்புற மாசுபடுதலால் மழைநீரின் அமிலத் தன்மை கூடும் அபாயம்
சுற்றுப்புறம் மாசு அடைவதால் சமீபகாலமாக மழைநீரின் அமிலத் தன்மை கூடிவருவதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
சுற்றுப்புற மாசுபாடு:
நாட்டில் தொடர்ந்து பெருகி வரும் தொழிற்சாலைகள் மூலம் வெளியேறும் புகை, வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு போன்றவற்றால் நாளுக்கு நாள் சுற்றுப்புறம் மாசு அடைந்து வருகிறது. இதனால், உலக வெப்பமயமாதல், அமில மழை போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு காற்றில் அதிக அளவு கலப்பதால் மழை நீரின் அமில தன்மை அதிகரிப்புக்கு காரணமாகின்றன.
அமிலத் தன்மை அதிகரிப்பு
நாட்டின் பல்வேறு நகரங்களில் எடுக்கப்பட்ட மழை நீரில் அமிலத் தன்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நாக்பூர், மோகன்பாரி (அசாம்), அலகாபாத், விசாகபட்டிணம், கொடைக்கானல் போன்ற பல்வேறு இடங்களில் பெய்த மழை நீரை சோதித்ததில், அவற்றின் பி.எச்., அளவு 4.77 முதல் 5.32 வரை இருப்பதாக தெரிய வந்துள்ளது. மழைநீரின் பி.எச்., அளவு 5.65க்கு குறைந்தால் அது அமிலத் தன்மை உடையதாக கருதப்படுகிறது. பி.எச்., அளவு குறைய குறைய அமிலத் தன்மையும் அதிகரிக்கிறது.
அமில மழையால் ஏற்படும் பாதிப்புகள்
மழைநீரில் அமிலத் தன்மை அதிகரிப்பதால் மண்வளம் பாதிக்கப்பட்டு விவசாய உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது. தாஜ்மஹால் போன்ற நினைவுச் சின்னங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகும். அமிலத் தன்மை கூடிய மழையால் கட்டடங்களின் ஸ்திரத் தன்மை பாதிக்கப்படும். நீரில் அதிக அளவு உலோகம் கலக்க வாய்ப்பு இருப்பதால், அதை அருந்தும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்