தமிழகத்தில் தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி 1 கோடி குழந்தைகளுக்கு போடப்பட்டது: சுகாதாரத்துறை தகவல்
தமிழகம் முழுவதும் கடந்த 27 நாட் களில் 1 கோடி குழந்தைகள் மற்றும் சிறு வர்களுக்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந் துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனையின்படி மத்திய சுகாதாரத்துறை நாடுமுழுவதும் 15 வயது வரையுள்ள சிறுவர்கள் அனைவருக்கும் தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி போட திட்டமிட்டது. அதன்படி தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி முகாம் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் பிப்ரவரி 28-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்த தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் வெளிவரத் தொடங்கின. சில இடங்களில் தடுப்பூசி போட்டதால் பள்ளி மாணவர்கள் மயக்கம் அடைந்ததாகவும், உயிரிழந்ததாகவும் வதந்திகள் பரவின. இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதா, வேண்டாமா என்று பெற்றோர் குழப்பமடைந்தனர். இதன் காரணமாக பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி சிறப்பு திட்ட முகாம் இம்மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க டிவி, சினிமா தியேட்டர், ரேடியோ போன்றவற்றில் விழிப்புணர்வு விளம் பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்கு நர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது: தமிழகம் முழுவதும் இது வரை சுமார் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 76 லட்சம் பேருக்கும் வரும் 15-ம் தேதிக்குள் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி குறித்த தவறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
முகாம் முடிந்த பிறகு, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு 9 மாதம் முதல் 12 மாதத்துக்குள் முதல் தவணையும், 16 மாதம் முதல் 24 மாதத்தில் இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசி போடப்படும்.
இந்த தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் தயாரிக்கப்படுகிறது. ரூ.1,000 மதிப்புள்ள தடுப்பூசி இலவச மாக போடப்படுகிறது என்றார்.