இந்தியர் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு : அமெரிக்காவில் தொடரும் அநியாயம்
அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது. வாஷிங்டனின் கென்ட் பகுதியில், சீக்கியர் ஒருவரை, ‘உங்கள் நாட்டுக்கு திரும்பி போ’ என கூறி, மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், அவர் காயமடைந்தார்.அமரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின், ‘அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கும் தடை விதித்தார். இதனிடையில், ‘விசா’ கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டதால், அமெரிக்காவில் பணிபுரியும் மற்றும் பணிபுரிய செல்லும் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், பணியாற்றும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் தாக்கப்படும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கான்சாஸ் மாகாணத்தில், உணவு விடுதியில் இருந்த இந்திய இன்ஜினியர் ஸ்ரீநிவாஸ், கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த அலோக் என்ற இந்தியர் காயமடைந்தார். தெற்கு கரோலினாவின் லான்காஸ்டர் பகுதியில், கடை நடத்தி வரும், இந்திய வம்சாவளியான, ஹர்னிஷ் படேல், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே கொதிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள உள்ள நிலையில், மற்றொரு இந்தியர் தாக்கப்பட்டுள்ள சம்பவம், நேற்று முன்தினம் நடந்துள்ளது. வாஷிங்டனின் கென்ட் பகுதியில் வசித்து வரும், சீக்கியர் ஒருவரை, மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ‘உங்கள் நாட்டு திரும்பி போ’ என்று கோஷமிட்டபடி, அந்த நபர் சுட்டுள்ளார். இதில், அந்த சீக்கியர் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் தப்பினார்.இந்த சம்பவங்களுக்கு, அமெரிக்க வாழ் இந்தியர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்களும் நடந்து வருகின்றன.
சுஷ்மா சுவராஜ் கண்டனம்அமெரிக்காவில், இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு, வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜ், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக, அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான, வெளிப்படையான விசாரணை நடைபெறும் என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். இந்த தாக்குதல்கள் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.