இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ரத்தசோகை
சமீபத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நலன் குறித்த ஆய்வில், இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட 58 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் ரத்தசோகை எனப்படும் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
குழந்தைகளை பாதிக்கும் ரத்தசோகை :
இந்த ரத்தசோகையால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இரும்பு சத்து குறைபாடு காரணமாகவே பெரும்பாலான குழந்தைகள் பல்வேறு நோய் தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். 2015 முதல் 2016 வரை 6 லட்சம் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 5 வயதிற்கு கீழ் உள்ள 38 சதவீதம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியும், 21 சதவீதம் குழந்தைகள் சுறுசுறுப்பு இல்லாமலும், 36 சதவீதம் குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்களாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த, 2011 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2015 ம் ஆண்டு இந்தியாவில் 12.4 கோடி குழந்தைகள் 5 வயதிற்கு கீழ் உள்ளனர். இவர்களில் 7.2 கோடி குழந்தைகள் ரத்தசோகையாலும், 5 கோடி குழந்தைகள் வளர்ச்சி குன்றியும், 2.6 கோடி குழந்தைகள் மந்ததன்மையுடனும், 4.4 கோடி குழந்தைகள் குறைவான எடையுடனும் உள்ளனர்.
குழந்தைகள் மட்டுமின்றி இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 முதல் 49 வயதுடைய 53 சதவீதம் பெண்களும், 23 சதவீதம் ஆண்களும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.