சோமாலியா சோகம் தீரலையே : 2 நாளில் 110 பேர் பலி
சோமாலியாவில் கடும் வறட்சி காரணமாக இரண்டு நாட்களில் 110 பேர் பலியாகினர். ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2011ல் ஏற்பட்ட பஞ்சத்தில் 2.60 லட்சம் மக்கள் மரணமடைந்தனர். இங்கு நடக்கும் உள்ளூர் போரில் அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சுத்தமான குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் குழந்தைகள் தவிக்கின்றனர். கால்நடைகள் கூட வாழ இயலாத நிலையில் மரணத்தை தழுவியுள்ளன.
தேசிய பேரிடர் வறுமையின் உச்சகட்டமாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தெற்கு சோமாலியாவில் 110 பேர் பலியாகி உள்ளனர். இதை தேசிய பேரிடராக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.அந்நாட்டின் பிரதம அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,’ பல மக்கள் உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர். இதன் பாதிப்பால், கடந்த இரண்டு நாட்களில் 110 பேர் பலியாகி உள்ளனர். இதிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகின் பல இடங்களில் உள்ள சோமாலியர்கள், தங்கள் நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.