பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை
‘பால் கொள்முதல் விலையை, ஆவின் நிறுவனம் உயர்த்த வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத் தலைவர் செங்கோட்டுவேல், பொதுச் செயலர் ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் கடும் வறட்சியால், வைக்கோல், சோளத்தட்டு, கலப்பு தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. பால் உற்பத்தி செலவும் உயர்ந்துள்ளது. கால்நடைகளுக்கு தேவையான, குடிநீரை கூட விலைக்கு வாங்க வேண்டி இருப்பதால், மாடுகளை விவசாயிகள், விற்று வருகின்றனர்.
ஐந்து ரூபாய் : தனியார் நிறுவனங்கள், பால் கொள்முதல் விலையை, 30ல் இருந்து, 32 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இதனால், விற்பனை விலையில், லிட்டருக்கு, ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளனர். ஆவின் நிறுவனம், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 31 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வந்த நிலையில், தற்போது, 24 லட்சம் லிட்டரை மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள், கொள்முதல் விலையை உயர்த்தா விட்டால், கால்நடை தீவனங்களின் விலை உயர்வை சமாளிக்கும் வகையில், தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்கும் நிலைக்கு தள்ளப்படுவர். ஆவினுக்கு வர வேண்டிய பாலை, தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பட்சத்தில், ஆவின் பால் கொள்முதல் அளவு, வீழ்ச்சியை சந்திப்பதோடு, தட்டுப்பாடும் ஏற்படும்.
போராட்டம் : எனவே, பால் கொள்முதல் விலையை, தனியாரை விட அதிகமாக, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்த வேண்டும். அதே அளவு, விற்பனை விலையிலும் உயர்த்த வேண்டும். இது குறித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், போராட்டம் நடத்துவது பற்றி, 11ம் தேதி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.