மகாராஷ்டிராவில் கருச்சிதைவு செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட 19 பெண் சிசுக்கள் கண்டுபிடிப்பு
மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தில் கருச்சிதைவு செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட 19 பெண் சிசுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக மரணம் ஒன்றின் மீதான விசாரணையின்போது போலீஸார் இதனைக் கண்டுபிடித்தனர்.
நடந்த சம்பவம் மற்றும் விசாரணை குறித்து போலீஸ் எஸ்.பி. தத்தாரே ஷிண்டே கூறும்போது, “எனது மருமகன் பிரவீன் ஜமாடே என்பவர் தனது மகளை கருச்சிதைவுக்கு கட்டாயப்படுத்தி கொன்றுவிட்டதாக சுனில் ஜாதவ் என்பவர் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகார் மனுவில், “எனது மகள் கருத்தரித்திருந்தார். எனது மகளின் கருவில் இருப்பது பெண் சிசு என்பதைத் தெரிந்து கொண்ட எனது மருமகன் ஜாமடே கருவைக் கலைத்துவிடுமாறு வற்புறுத்தியிருக்கிறார். என்னிடமும் இதுகுறித்து பேசினார். நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், எனது மகளை பாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கருச்சிதைவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அது வெற்றி பெறவில்லை. சிறிது நேரத்தில் எனது மகள் இறந்துள்ளார். என் மகளை, கருச்சிதைவு செய்ய கட்டாயப்படுத்தி கொலை செய்துவிட்டார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் மருத்துவர் பாபாசாஹேப் கித்ராபூர் மற்றும் இறந்துபோன பெண்ணின் கணவர் பிரவீன் ஜமாடே ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கருச்சிதைவு குற்றச்சாட்டுக்குள்ளான மருத்துவர் பாபாசாஹேப் கித்ராபூர் தற்போது தலைமறைவாக இருக்கிறார். அவர் ஹோமியோபதி மருத்துவர் எனத் தெரிகிறது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கருச்சிதைவு செய்யப்பட்ட 19 பெண் சிசுக்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டது தெரியவந்தது.
மாய்ஷால் எனும் பகுதியில் பைகளில் கட்டப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டன. சிசுக்கள் கண்டெடுக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கருச்சிதைவு புகாருக்குள்ளான பாரதி மருத்துவமனைக்கு பின்னால் உள்ளது.
அந்தக் கால்வாயில்தான் கருச்சிதைவு செய்யப்பட்ட பெண் சிசுக்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீசுவதை பாபாசாஹேப் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்றார்.