உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுக்கு பிறகு மகனை முதல்வராக்க லாலு பிரசாத் திட்டம்
உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிஹார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 11-ல் வெளியாகும் இந்த முடிவுகளுக்கு ஏற்ப லாலு தனது மகன் தேஜஸ்வி பிரசாத்தை முதல்வராக முன்னிறுத்துவது குறித்து முடிவு எடுக்கிறார்.
லாலு – ராப்ரி தேவி தம்பதியரின் இரு மகன்களில் இளையவரான தேஜஸ்வி (27), பிஹாரின் துணை முதல்வராக பதவியேற்றார். இவரது அண்ணன் தேஜ் பிரதாப் யாதவ், சுகாதார அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர்களில், தேஜஸ்வியை பிஹார் முதல்வ ராக உயர்த்த வாய்ப்பு தேடி வருகிறார் லாலு.
கடந்த பிப்ரவரி 14-ல் லாலு தனது மகன் தேஜஸ்வியை முதல்வராக பார்க்க விரும்புவ தாகக் கூறினார். இதையடுத்து அவரது கட்சி எம்எல்ஏக்கள் சிலர் தேஜஸ்வியை முதல்வராக்க வேண்டும் என பிப்ரவரி 23-ல் தெரிவித்தனர். இதற்கு நிதிஷ் குமார் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின் லாலு தலையிட்டு அமைதி ஏற்படுத்தினார். இந் நிலையில் உ.பி. தேர்தல் முடிவை பொறுத்து இந்தப் பிரச்சினையில் லாலு முடிவு எடுக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் லாலுவின் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “ஜனநாயக முறைப் படி எங்கள் கட்சிக்கு லாலு முன் னுரிமை கேட்பதில் தவறில்லை. உ.பி.யில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் தேஜஸ்வியை முதல்வராக்க வலி யுறுத்துவோம். தனிப் பெரும்பான் மைக்கு 122 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸ் சேர்ந்த பின் பெரும்பான்மை பெறுவதற்கு 15 எம்எல்ஏக்கள் மட்டுமே தேவை. இதை எங்களால் எளிதாக சேர்க்க முடியும் என்பது நிதிஷுக்கும் தெரியும்” என்று தெரிவித்தனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமார் 17 ஆண்டுகள் இருந்தார். இவர் பாஜகவின் ஆதரவுடன் பிஹாரில் தொடர்ந்து இருமுறை முதல்வராக இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து அக்கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ், தனது அரசியல் எதிரியான லாலுவுடன் கைகோர்த்தார்.
தற்போது லாலுவின் நடவடிக்கையால் பாஜக மீதான நிதிஷ்குமாரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உ.பி.யில் பாஜக வெற்றி பெற்றால் லாலு மவுனமாகி விடுவார் என ஐக்கிய ஜனதா தளம் கருதுகிறது. எனவே தான் உ.பி.யில் போட்டியிடும் முடிவை நிதிஷ்குமார் கடைசி நேரத்தில் ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. உ.பி.யில் நிதிஷ் சார்ந்துள்ள குர்மி சமூகம் உட்பட அவரது ஆதரவு வாக்குகள் ஓரிரு சதவீதம் உள்ளது. இந்த வாக்குகளைப் பிரித்து பாஜகவின் தோல்விக்கு தாம் காரணமாகி விடக் கூடாது என நிதிஷ் எண்ணியதாக கூறப்படுகிறது.
உ.பி.யில் பாஜக தோல்வி அடைந்தால், பிஹாரில் லாலு தனது மகனுக்கு முதல்வர் பதவி அளிக்க நிதிஷ்குமாரிடம் நேரடியாக வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.