உலக மகளிர் தினம்.. ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து!
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் கூடுதல் அதிகாரம் பெறுவதை மேம்படுத்த உறுதியேற்போம் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில் உலகை வாழவைக்கும் பெண்ணாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும் என மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் தினம் தொடர்பாக ஆளுநர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகமயமான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியும் சர்வதேச அளவில் பெண்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து உள்ளன. இந்தியாவிலும் பெண்கள் முன்னேற்றம் மிகச்சிறப்பான நிலையை எட்டி இருக்கிறது.
கூடுதல் அதிகாரம் பாலின பாகுபாட்டை தவிர்க்கவும், சமத்துவமின்மையை நீக்கவும், பெண் இனத்தை மதிக்கவும், தற்போது மாறிவரும் பணித்தளங்களில் பெண்கள் கூடுதல் அதிகாரம் பெறுவதை மேம்படுத்தவும் இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் தனது மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள மகளிர் தின அறிக்கை பெண்ணின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8-ம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் அனைத்து மகளிர்க்கும் எனது இனிய மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பவுன் தங்கம் பெண்கள் கல்வி அறிவு பெற்று, பொருளாதார ஏற்றம் பெற்றிடவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக கருவில் இருக்கும் சிசுவில் இருந்து முதியோர் வரை பயன்பெறும் வகையிலும், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4 கிராம் தங்க நாணயத்தை 8 கிராமாக உயர்த்தியது.
ஜெ.வின் மகளிருக்கான திட்டங்கள் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்பது மாத காலம் மகப்பேறு விடுப்பு, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் சுய உதவிக் குழுக்கள், வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்.
மகளிர் காவல் நிலையங்கள் இந்தியாவிற்கே முன்னோடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைந்திட 13 அம்ச திட்டம், 100 சதவீத மானியத்தில் நவீன தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பான வசிப்பிடத்தில் தங்கிட வேண்டுமென்ற உயரிய நோக்கில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை ஏற்படுத்தியது. முதன்முதலாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களை அமைத்தது போன்ற பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
“அம்மா இருசக்கர வாகனத் திட்டம்” அம்மா 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்த, உழைக்கும் மகளிர் பயன்பெறும் வகையில், ஆண்டு ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் செலவில் இரு சக்கர வாகனம் வாங்கிட ஐம்பது சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் இருபதாயிரம் வழங்கிடும் “அம்மா இருசக்கர வாகனத் திட்டம்” ஏழை கர்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை, அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
உலகை வாழவைக்கும் பெண்ணாக பெண்கள் ஒற்றுமையுடனும், தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் வாழ்ந்து, வாழ்வில் எதிர்படும் சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டு, உலகை வாழவைக்கும் பெண்ணாக அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, எனது இதயபூர்வமான மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனத அறிக்கையில் தெரிவித்துள்ளார்.