ஆதார் பேமெண்ட் செயலி பற்றி வணிகர்களும் வாடிக்கையாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
ஆதார் பேமெண்ட் செயலி என்பது வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவைகளைக் கைரேகை அங்கீகாரம் பெற்று அளிக்கக் கூடிய ஒரு சேவையாகும். இதற்கு வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்கான ஆண்ட்ராய்டு செயலியை ஐடிஎப்சி வங்கி அரசுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. ஆதார் பேமெண்ட் செயலியினால் கார்டு பரிவர்த்தனைகள் போன்று உங்களுக்குக் கூடுதல் கட்டணங்கள் ஏதும் இருக்காது. அரசு அதிகாரிகளின் கணக்கின் படி 40 கோடி வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள வங்கி கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க 2017 மார்ச் 31 வரை கலா வரம்பை அறிவித்துள்ளது மத்திய அரசு.
என்ன பயன்? 1. பரிவர்த்தனை செய்யும் போது சேவை வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை. 2. டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் ஏதும் தேவையில்லை. 3. எனவே கடவுச்சொல் மற்றும் தனிநபர் அடையாள எண்(PIN) எதையும் நினைவில் கொள்ளத் தேவையில்லை.
வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? 1. ஆதார் எண் அவசியம் 2. ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து இருக்க வேண்டும்.
வணிகர்களுக்கு என்ன தேவை? 1. ஸ்மார்ட்போனில் இணையதளம் மற்றும் ஆதார் பேமெண்ட் செயலியை நிறுவியிருக்க வேண்டும். 2. பையோமெட்ரிக் சாதனம் அதாவது கைவிரல் ரேகை மற்றும் கண் விழித்திரை ஸ்கேனர் போன்ற வற்றை வங்கி அதனை ஆதார் பேமெண்ட் செயலியுடன் இணைக்க வேண்டும்.
இந்தச் செயலி எப்படிச் செயல்படுகின்றது? கடைக்காரர்கள் கைவிரல் ரேகை அல்லது கண் விழித்திரை ஸ்கேனரை ஸ்மார்ட்போனில் இணைத்து இருக்க வேண்டும். பரிவர்த்தனை செய்யும் போது வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் எண்ணைச் செயலியில் உள்ளிட வேண்டும். அப்போது அந்தச் செயலி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை காண்பிக்கும். பின்னர் வாடிக்கையாளர்கள் தங்களது கைவிரல் ரேகையைப் பையோமெட்ரிக் ஸ்கானரில் வைப்பதன் மூலம் கைரேகை சரிபார்க்கப்பட்டு இரண்டும் சரியாக இருக்கும் போது பரிவர்த்தனை செய்யப்படும். இதற்காகத் தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் (UIDAI) மற்றும் இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் இரண்டும் இணைந்து இதற்கான பணிகளைச் செய்கின்றன.
செயலியில் உள்ள வரம்பு வணிகர்களுக்குக் கைரேகை ஸ்கானர்களை வாங்குவது கூடுதல் செலவை ஏற்படுத்தும். ஒரு தனிநபரிடம் இருந்து மற்றொருவருக்குப் பணத்தை அனுப்பிப் பெற முடியாது.