இந்தியர்களின் வேலைக்கு உலை : அமெரிக்க அதிபரின் புதிய முயற்சி
அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப்பின் புதிய முடிவால், அமெரிக்காவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.’அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை’ என்ற கோஷத்துடன், வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அளிப்பதை குறைக்கும் முயற்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். மேலும், அமெரிக்காவின் பணிகளை வெளிநாடுகளில் இருந்து செய்யும், ‘அவுட்சோர்சிங்’ முறையிலும், அவர் கை வைத்துள்ளார். இதைத் தவிர, அமெரிக்காவில் பணியாற்றி வரும் வெளிநாட்டவருக்கு அளிக்கப்படும், எச் – 1 – பி விசாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் பணியாற்றும் மற்றும் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்காக பணியாற்றும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், ‘எச் – 4 விசா உள்ளவர்களும் அமெரிக்காவில் பணியாற்றலாம்’ என, அமெரிக்க அதிபராக, ஒபாமா இருந்தபோது, 2015ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எச் – 1 – பி விசா உடன், அமெரிக்காவில் பணியாற்றுவோரின் மனைவி அல்லது கணவருக்கே, எச் – 4 விசா வழங்கப்படுகிறது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, மாவட்ட கோர்ட், ‘அதிபர் உத்தரவு செல்லும்’ என, தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து, வாஷிங்டனில் உள்ள மேல்முறையீட்டு கோர்ட்டில், தற்போதைய அரசு, ஒரு மனுவை அளித்துள்ளது.’எச் – 4 விசா உள்ளவர்களும் வேலை பார்க்க அனுமதிக்கும் உத்தரவை, 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்; அதற்குள் இதில் தகுந்த முடிவு எடுக்கப்படும்’ என, டொனால்டு டிரம்ப் அரசு கூறியுள்ளது.தற்போது, அமெரிக்காவில், எச் – 1 – பி விசா வைத்துள்ளவர்களில், இந்தியர்களே அதிக அளவில் உள்ளனர். அதேபோல், எச் – 4 விசா வைத்துள்ள, அவர்களுடைய மனைவி அல்லது கணவர் என, ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர்.எச் – 4 விசா வைத்துள்ளவர்களுக்கு வேலை அளிக்க முடியாது என்ற முடிவெடுக்கப்பட்டால், இவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.