மருத்துவமனையில் தாக்குதல் : 30 பேர் பலி; 50 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில், அமெரிக்க துாதரகம் அருகே அமைந்துள்ள, ராணுவ மருத்துவமனையில் நேற்று, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 30 பேர் பலியாயினர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆசிய நாடுகளில் ஒன்றான, ஆப்கானிஸ்தானில், தலிபான் மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ அதிகாரிகள், வீரர்களை குறிவைத்தே, பெரும்பாலும் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஆப்கான் தலைநகர், காபூலில் உள்ள சர்தார் தாவுத் கான் ராணுவ மருத்துவமனையில், டாக்டர்கள் போல் உடையணிந்து உள்ளே புகுந்த பயங்கரவாதிகள், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். தங்கள் உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருந்த பயங்கரவாதிகள், தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் உட்பட, 30 பேர் பலியாயினர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டாக்டர்கள் வேடத்தில், பயங்கரவாதிகள் மருத்துவமனைக்குள் சுற்றித் திரிவது குறித்து, உள்ளிருக்கும் நோயாளிகள் சிலர், சமூக வலைதளத்தில் தகவல் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனை மாடியில் இறங்கிய ராணுவ வீரர்கள், சாதுர்யமாக மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இறுதியில், அங்கிருந்த பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், மருத்துவமனையில், நுாற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதால், பதற்றம் நீடிக்கிறது. இந்த மருத்துவமனை அருகிலேயே, அமெரிக்க துாதரக அலுவலகம் அமைந்துள்ளதால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.