ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நடனம்: சமூகவலைதளத்தில் கடும் விமர்சனம்
ஐக்கிய நாடுகள் சபையில் ஐஸ்வர்யா தனுஷ் நிகழ்த்திய பரதநாட்டிய நடனத்தை சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
மகளிர் தினத்தன்று ஐநா சபையில், ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றார்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஐஸ்வர்யா தனுஷின் நடனத்தின் வீடியோ வடிவம் சமூகவலைதளத்தில் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியது. மேலும், பரதநாட்டியத்தில் புகழ் பெற்ற அனிதா ரத்னம், “ஐக்கிய நாடுகள் சபையில் பரதாநாட்டியத்துக்கு பரிதாபமான நிலை” என்று ஐஸ்வர்யா தனுஷின் வீடியோ பதிவை மேற்கோளிட்டு தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ பதிவை வைத்து, ஐஸ்வர்யா தனுஷை கிண்டல் செய்யும் தொனியில் பல்வேறு வீடியோ பதிவுகள் இணையத்தில் தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ பதிவுகள் குறித்து ஐஸ்வர்யா தனுஷ் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும், ஐஸ்வர்யா தனுஷை கிண்டல் செய்யும் தொனியில் வெளியாகியுள்ள வீடியோக்கள் மற்றும் கருத்துகளுக்கு கிருத்திகா உதயநிதி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.