சிரியாவில் ஓராண்டில் 652 குழந்தைகள் பலி
சிரியாவில் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 652 சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உயிர் பலியாகி உள்ளனர் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும், சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பும் சிரியாவின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது.
இதனால் சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தரப்பினரிடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் குழந்தைகளே அதிகம் பாதிக் கப்படுவதாக ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் உள்நாட்டுப் போரில் 652 சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் பலியாகி உள்ளனர். குறிப்பாக பள்ளிகள் மற்றும் அதற்கு அருகில் வீசப்பட்ட குண்டுகளால் குழந்தைகள் அதிகம் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 850-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பல்வேறு கிளர்ச்சி குழுக்களில் சேர்க்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.