இந்தியர்களும் தங்கமும்… 2020ல் 950 டன்களை எட்டுமாம்!
2020ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 950 டன்களை எட்டும் என்று, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தங்கச் சந்தையில் உள்ள வெளிப்படைத்தன்மை ஆகிய காரணிகளால் தங்கத்தின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்றும் உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. மஞ்சள் உலோகமான தங்கத்திற்கு ஆசைப்படாத பெண்களே இல்லை எனலாம். இந்திய பெண்கள் தங்களின் சேமிப்பாக அதிகம் நம்புவது தங்கத்தைத்தான். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து,தொடங்கி பல விஷேசங்களுக்கும் தங்கத்தை சீராக கொடுப்பது இந்தியர்களின் பண்பாடு. எனவேதான் உலக அளவில் இந்தியர்கள் தங்கம் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ளனர். ஒரு பவுன் எத்தனை ஆயிரம் விற்றாலும் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பல நூறு டன் தங்கம் ஆண்டுதோறும் இறக்குமதிதான் செய்யப்படுகிறது
2015ஆம் ஆண்டில் தங்கத்தின் தேவை 857.20 டன்னாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. 2016ஆம் ஆண்டில் 675.5 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 21% குறைவாகும். தங்கத்தின் நுகர்வும், மக்களின் தங்களை நகை வாங்கும் ஆர்வமும் குறைந்து போனதற்கு பல காரணங்கள் உள்ளன. உயர்பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தங்கம் வாங்குவதை மக்கள் குறைத்து வந்தனர். இதனால் இந்தியாவில் தங்கத்தின் தேவை கடந்த ஆண்டு குறைந்தது.
பண மதிப்பு நீக்கத்தால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி சரிந்திருப்பது தற்காலிகமானது என்று கூறியுள்ள உலக தங்க கவுன்சில் நிர்வாகி, விரைவில் நிலைமை சீராகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 950 டன்களை எட்டும் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நாங்கள் வாடிக்கையாளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின்போது, பணத்தைவிட தங்கத்தை அதிகம் நம்புகிறோம் என்று 63 சதவிகிதத்தினர் ஆய்வில் பதிலளித்தனர். மேலும் நீண்டகால அடிப்படையில் தங்கம் எங்களை பாதுகாப்பாக உணரச் செய்கிறது என்று 73 சதவிகிதத்தினர் கூறினர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முந்தைய ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் தேவையில் லேசான பின்னடைவு ஏற்பட்டாலும் பின்னர் நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. நடப்பு 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 650 டன்கள் முதல் 750 டன்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தங்கச் சந்தையில் உள்ள வெளிப்படைத்தன்மை ஆகிய காரணிகளால் தங்கத்தின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்று உலக தங்கக் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு தங்கத்திற்கான தேவை முன்னேற்றமடையும் என்றாலும் 2017ஆம் ஆண்டுக்கான எங்கள் கணிப்பு எச்சரிக்கையானது. வாடிக்கையாளர்கள் 650 டன்கள் முதல் 750 டன்கள் வரை வாங்குவார்கள் என்றே எதிர்பார்க்கிறோம். ஆனாலும் பொருளாதார வளர்ச்சி, தங்க விற்பனைச் சந்தையில் உள்ள வெளிப்படைத்தன்மை ஆகியவற்றினால் தேவை இன்னும் கூடுதலாகும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்படி, வருகிற 2020ஆம் ஆண்டில் இந்தியர்கள் 850 டன்களிலிருந்து 950 டன்கள் வரையிலான தங்கத்தை வாங்குவார்கள் என்று உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஒரு சவரன் எவ்வளவு? இப்போது ஒருசவரன் தங்கம் செய்கூலி சேதாரம் சேர்த்து 30ஆயிரம் ஆக விற்பனையாகிறது. 2020ஆம் ஆவது ஆண்டில் ஒரு சவரன் இந்தியாவில் எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று கணித்து கூறினால் இப்போதே கொஞ்சம் வாங்கி சேமித்துக்கொள்ளலாம் என்பது இல்லத்தரசிகளின் யோசனையாக உள்ளது.