சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை : பாகிஸ்தான் செல்லும் இந்திய அதிகாரிகள் குழு
சிந்து நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்திய அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று பாகிஸ்தான் செல்ல உள்ளது. இருநாடுகளிடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், இந்திய அதிகாரிகள் குழு பாகிஸ்தான் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிந்து, பியாஸ், சட்லஜ், செனாப் ஆகிய நதிகளின் நீர்பங்கீடு தொடர்பாக 1960-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு யூரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர்.
இதனால் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவில் நடைபெற இருந்த இருநாட்டு அதிகாரிகளின் சந்திப்பை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் நதி நீர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்தியா சார்பில் சிந்து நதியில் இரண்டு இடங்களில் நீர்மீன் நிலையங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இது குறித்து உலக வங்கியிடம் முறையிட்டுள்ளது. உலக வங்கியின் வேண்டுகோளை ஏற்று இந்தியாவை சேர்ந்த 9 பேர் அடங்கிய குழுவினர், பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு செல்கின்றனர். சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் இதுவரை 112 முறை பேச்சு நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.