100-வது டெஸ்ட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் சாதனை வெற்றி: தொடர் சமன்
வங்கதேச அணி தன் 100-வது டெஸ்ட் போட்டியில் இலங்கையை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியை முதல் முறையாக அதன் மண்ணில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செயதது வங்கதேசம்.
கொழும்புவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சந்திமாலின் 138 ரன்களுடன் இலங்கை 338 ரன்கள் எடுத்தது. மெஹதி ஹசன் அதிகமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், தொடர்ந்து ஆடிய வங்கதேசம் ஷாகிப் அல் ஹசனின் அபாரமான சதத்துடன் (116) மற்றும் முஷ்பிகுர் ரஹிம் (52), மொசாடக் ஹுசைன் (75) ஆகியோரது பின்கள பங்களிப்பில் 467 ரன்கள் குவித்து 129 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் 2-வது இன்னிங்ஸில் இலங்கை கருண ரத்னவின் 126 ரன்களுடன் 319 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷாகிப் உல் ஹசன் 4 விக்கெட்டுகளையும், இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கு 191 ரன்கள் என்று களமிறங்கிய வங்கதேசம் தமிம் இக்பாலின் அதிரடி 82 ரன்களுடன் 191/6 என்று இலக்கை எட்டி அரிய வெற்றி ஒன்றை ஈட்டியது, இது வங்கதேசத்தின் 9-வது டெஸ்ட் வெற்றியாகும். இதற்கு முன்னதாக ஜிம்பாப்வேயை 5 டெஸ்ட் போட்டிகளிலும் மே.இ.தீவுகளை 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தை ஒரு டெஸ்ட் போட்டியிலும் வீழ்த்தியுள்ளது வங்கதேசம்.
இந்நிலையில் இந்த வெற்றி வங்கதேச டெஸ்ட் ஆட்டத்திற்கு திருப்பு முனை வெற்றியாகும். அதாவது வலுவான அணியை அந்த அணியின் மண்ணிலேயே வீழ்த்துவது வங்கதேசத்தின் நீண்ட கால கனவு அது இன்று நிறைவேறியுள்ளது. தொடர் நாயகனாக ஷாகிப் அல் ஹசனும், ஆட்ட நாயகனாக தமிம் இக்பாலும் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடக்கத்தில் சவுமியா சர்க்காரையும் இம்ருல் கயேசையும் ஹெராத் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி வங்கதேச வீர்ர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். ஆனால் திடீரென ஒரு 1 மணி நேர ஆட்டத்தில் சபீர் ரஹ்மானும் (41), தமிம் இக்பாலும் 77 ரன்களை விளாச ஆட்டம் வங்கதேசம் பக்கம் மாறியது. ஆனால் வெற்றி பெற 29 ரன்கள் இருந்த போது ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார், முஷ்பிகுர் ரஹீமை எல்.பி என்றார் நடுவர் எஸ்.ரவி, ஆனால் ரிவியூவில் முஷ்பிகுர் பிழைத்தார். மொசாடக் ஹுசைன் அளித்த ரிடர்ன் கேட்சை ஹெராத் தவற விட்டார்.
அதன் பிறகு மொசாடெக் ஹெராத்தை 3 பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார். வெற்றிக்கு 2 ரன்கள் இருக்கும் போது மொசாடக் ஆட்டமிழந்தார். மெஹதி ஹசன் வெற்றிகான ரன்களை அடித்தார். வங்கதேச அணியினர் தாறுமாறாக வெற்றியைக் கொண்டாடினர்.