கிணற்றில் உயிருக்கு போராடிய மாணவர்களை காப்பாற்றிய சிறுவன்; பொதுமக்கள் பாராட்டு
திண்டுக்கல் அருகே கிணற்றில் ஆமை பிடிக்க முயன்றபோது, தவறி விழுந்து உயிருக்கு போராடிய 2 மாணவர்களை காப்பாற்றிய சிறுவன் கைமுறிந்து சிகிச்சையில் உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அய்யங்கோட்டையை சேர்ந்தவர் மைதிலிநாதன்,12, குகன்,12, லோகேஷ்குமார்,12. மூவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கின்றனர். தற்போது அரசு பொதுத் தேர்வு நடப்பதால், மதிய வேளையில்தான் வகுப்பு நடக்கிறது. அதே பகுதியில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் ஆமைகள் இருப்பதாகவும், அவற்றை பிடித்துவந்து விளையாடலாம் என மூவரும் திட்டமிட்டனர்.
ஆமை பிடிக்கச் சென்றனர்: அந்தக் கிணற்றில் படிக்கட்டுகள் இல்லை. அதேசமயம் தண்ணீர் இருந்தது. இருப்பினும் மூவரும் ஆமை பிடிக்கச் சென்றனர். கிணற்று சுவரில் வளர்ந்திருந்த செடிகள், பாறைகளை பிடித்தபடி குகனும், லோகேஷ்குமாரும் உள்ளே இறங்கினர். அப்போது மண் சரிந்ததால் இருவரும் உள்ளே விழுந்து தத்தளித்தனர்.
உடன் சென்ற மைதிலிநாதனும் பாறைகளை பிடித்து தொங்கியபடி, அந்த இருவரின் கைகளையும் பற்றி மேலே துாக்கினார். மூவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி இளைஞர்கள் ஓடி வந்தனர். அதேநேரம் இருவரையும் காப்பாற்றிய மைதிலி நாதன், மீண்டும் மண் சரிந்து கிணற்றுக்குள் விழுந்தார். இதில் அவருக்கு கை முறிவும், இடுப்பில் காயமும் ஏற்பட்டது.
அவரை இளைஞர்கள் கூடையில் கயிறு கட்டி காப்பாற்றினர். பின், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மைதிலிநாதனை பொது மக்களும், போலீசாரும் பாராட்டினர்.