சான்றிதழ்களில் மாணவர்களின் படம், ஆதார் எண் கட்டாயம்… பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு
சான்றிதழ்களில் மாணவர்களின் புகைப்படம், ஆதார் எண் கட்டாயமாக இடம் பெற்றிருக்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. போலிச் சான்றிதழ்களை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் மானியங்கள், நலத்திட்டங்கள் மற்றும் ரேஷன் பொருட்களை பெறுவது வரை அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி அதிரடி உத்தவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பட்டப்படிப்பு சான்றிதழ்களிலும், மதிப்பெண் சான்றிதழ்களிலும் மாணவ, மாணவியரின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் இடம் பெறச்செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவியர் படித்த கல்வி நிறுவனத்தின் பெயரையும் சான்றிதழ்களில் வெளியிடவேண்டும் என்றும் யுஜிசி தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. சான்றிதழ்களில் இப்படி பாதுகாப்பு அடையாள அம்சங்களை ஏற்படுத்துவது போலிகளை தடுக்கவும், பரிசோதனையை எளிதாக்கவும் உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.