ஆந்திராவில் 173 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட அணை: லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது
ராயலசீமா மாவட்டங்களில் வறட்சியைப் போக்க கோதாவரி நதியின் மீது 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கோதாவரி நதியையும், கிருஷ்ணா நதியையும் இணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. கோதாவரி நதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. இதைத் தடுக்கவும் ராயலசீமா பகுதியின் வறட்சியைப் போக்கவும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ‘பட்டிசீமா’ அணைக்கட்டை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கிய இந்த அணையின் கட்டுமானப் பணி, வெறும் 173 நாட்களில் முடிக்கப்பட்டது.
இதன் மூலம் போலாவரம் அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆந்திராவிலேயே மிகவும் வறண்ட பகுதியாகக் கருதப்படும் ராயலசீமாவுக்கு தண்ணீர் விநியோ கம் செய்யப்பட உள்ளது.
இதனிடையே, மிகக்குறை வான காலத்தில் கட்டி முடிக்கப் பட்ட அணையாக, பட்டிசீமா லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த தகவலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில் நேற்று தெரிவித்தார்.