நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்
நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தில் 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக சுமார் 3 மணி நேரம் ஆட்டம் வீணானது.
ஹாமில்டன் நகரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிக்கா முதலில் பேட் செய்தது. அந்த அணியில் அறிமுக வீரராக தியுனிஸ் டி புருயன் இடம் பெற்றார். ஆரம்பத்திலேயே இரு விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்க அணி தடுமாறியது.
டீன் எல்கர் 5, புருயன் 0 ரன்களில் வெளியேறினர். 5 ரன்களுக்கு இரு விக்கெட்களை இழந்த நிலையில் ஆம்லாவுடன் இணைந்த டுமினி நிதானமாக விளையாடினார். ஸ்கோர் 28 இருந்த போது டுமினி ஆட்டமிழக்கும் வாய்ப்பு உருவானது. நெய்ல் வாக்னர் வீசிய பந்து டுமினியின் கால்காப்பை தாக்கியது.
களநடுவர் அவுட் கொடுக்க மறுத்த நிலையில் நியூஸிலாந்து அணி மேல்முறையீடு செய்ய வில்லை. ஆனால் டிவி ரீப்ளேவில் பந்து ஸ்டெம்பை தாக்குவது தெரியவந்தது. எனினும் இந்த வாய்ப்பை டுமினி சரியாக பயன்டுத்த தவறினார். அவர் 20 ரன்கள் எடுத்த நிலையில் மேட்ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட் டுக்கு டுமினி, ஆம்லாவுடன் இணைந்து 59 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய ஆம்லா 93 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் கிராண்ட் ஹோம் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 97 ஆக இருந்தது. டுபிளெஸ்ஸிஸ் 16 ரன்கள் எடுத்திருந்தபோது வாக்னர் வீசிய பந்தை அடித்த போது மட்டையில் லேசாக உரசிய படி விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் தஞ்சம் அடைந்தது.
ஆனால் களநடுவர் அவுட் கொடுக்க மறுத்தார். நியூஸிலாந்து அணி மேல்முறையீட்டை ஏற்கெனவே இரு முறை பயன் படுத்தி இருந்ததால் இம்முறை அதனை கையில் எடுக்கமுடியாமல் போனது. இதனால் ஆட்டமிழப் பதில் இருந்து டுபிளெஸ்ஸிஸ் தப்பினார்.
தென் ஆப்பிரிக்க அணி 41 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக முதல் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டுபிளெஸ்ஸிஸ் 33, டெம்பா பவுமா 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் மெட் ஹென்றி, கிராண்ட் ஹோம் தலா இரு விக்கெட்கள் கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
Keywords: 3-வது டெஸ்ட் போட்டி, தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்