நெடுவாசல், காரைக்கால் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு நாளை ஒப்பந்தம்
நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் மத்திய அரசு நாளை (மார்ச் 27) ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது. இதில் தமிழகத்தின் நெடுவாசல், புதுச்சேரியின் காரைக்கால் உட்பட மொத்தம் 31 இடங்கள் இடம்பெற்றுள்ளன.
நாடு முழுவதிலும் நிலப்பகுதி மற்றும் கடல்பகுதிக்கு அடியில் இயற்கை வளமான ஹைட்ரோ கார்பன் (நீரக கரிசேமம்) இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மீத்தேன், ஷேல் ஆயில், காஸ் ஹைட்ரேட், தார் உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை வளங்களுக்கான இந்த ஆய்வை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஆயில் இந்தியா லிமிடெட் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் செய்திருந்தன. இந்த நிறுவனங்களால் பல ஆண்டு களுக்கு முன்பே இந்த இயற்கை வளம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எடுக்க முடியாமல் கடந்தகால மத்திய அரசுகள் விட்டு வைத்தன. இந்நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் அவற்றை எடுக்க முடிவு செய்தது.
இதில் 31 ஒப்பந்ததாரர்களுக்கு விடப்பட்ட ஏலத்திற்கான ஒப்பந்தம் டெல்லியில் உள்ள தாஜ் மான்சிங் நட்சத்திர ஹோட்டலில் நாளை கையெழுத்தாக உள்ளது. மத்திய அரசு மற்றும் ஏலம் எடுத்த நிறுவனங்கள் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சிக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை வகிக்கிறார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் இந்த அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “இந்த திட்டத்திற்கு தமிழகம், அசாம் மற்றும் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் கடைசி நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவோம். ஆனால் துரப்பன பணிகளை தொடங்குவதற்கு இந்த ஒப்பந்தம் இறுதியானது அல்ல. இதன் பிறகு அந்த நிறுவனங்கள் கனிமவளச் சுரங்கக் குத்தகை, சுற்றுச்சூழல், மாசுக்கட்டுபாடு உட்பட சுமார் 30 வகையான அனுமதியை பெறவேண்டும் . மத்திய மற்றும் மாநில அரசு துறைகளிடம் இந்த அனுமதியை பெறுவது ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாகும். சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் பேசி, அனுமதி பெறுவது நிறுவனத்தின் பணியாகும். இதற்கு மத்திய அரசு உதவி செய்யும். ஆனால் தமிழகத்தில் நிலவும் சூழலை பார்த்தால் அங்கு அரசியல் ரீதியாக அணுக வேண்டும் எனத் தோன்றுகிறது. ஒப்பந்தம் திட்டமிடப்பட்ட 31 இடங்களில், போராட்டம் காரணமாக நெடுவாசல் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் போராட்டக் குழுவினர் கடந்த 22 ம் தேதி மத்திய அமைச்சருடன் நடத்திய சந்திப்புக்கு பிறகு நெடுவாசல் மீண்டும் ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
நாட்டில் மொத்தம் 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அமைச்சரவை கடந்த 2015 செப்டம்பரில் முடிவு எடுத்தது. இதைத் தொடர்ந்து, சர்வதேச அளவிலான 46 ஒப்பந்ததாரர்களிடம் ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது. எனினும், 31 இடங்களுக்கு 28 நிறுவனங்கள் அதிக தொகை குறிப்பிட்டதால் ஏலம் இறுதி செய்யப்பட்டது.
அசாமில் 9, குஜராத்தில் 5, தமிழகத்தில் ஒன்று, புதுச்சேரியில் ஒன்று, ஆந்திராவில் 4, ராஜஸ் தானில் 2, மும்பை கடல் பகுதியில் 6, மத்தியபிரதேசம், கட்ச் கடல்பகுதி, கிருஷ்ணா-கோதாவரி நதிப்படுகை ஆகியவற்றில் தலா 1 என மொத்தம் 31 இடங்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.