சென்னையில் சிக்கிய பழைய நோட்டுகள் : பின்னணியில் வங்கி அதிகாரிகள்?
சென்னையில், பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதை மாற்றித் தர, வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்தனரா என்ற சந்தேகம், வருமான வரித் துறையினருக்கு ஏற்பட்டு உள்ளது.
சென்னை, மணப்பாக்கம் அருகே, மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான, பழைய, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான கடைசி தேதி, 2016 டிசம்பர், 31ல் முடிந்தது. அதன்பின், அவற்றை வைத்திருப்பது குற்றம் என, மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள், இன்னமும் சட்டவிரோதமாக மாற்றப்படுகிறதோ, அதற்கு, வங்கி அதிகாரிகள் உடந்தையாக உள்ளனரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
டிச., 31க்குள் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை, வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு ஏற்கனவே அனுப்பி விட்டன என்பதால், வங்கி அதிகாரிகள், இது போன்ற செயலில் ஈடுபட வாய்ப்பில்லை. அதனால், ரிசர்வ் வங்கியில் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சென்னை, பரங்கிமலை உதவி கமிஷனர் மோகன்தாஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் அருள் சந்தோஷ் முத்து ஆகியோர், வருமான வரி புலனாய்வு துணை இயக்குனரை நேற்று சந்தித்து, 2.41 கோடி ரூபாய், பழைய நோட்டுகளை ஒப்படைத்தனர். மேலும், அதை வைத்திருந்த இருவரிடமும், வருமான வரித் துறையினர் விசாரணையை துவங்கினர். அந்த நோட்டுகளை, அவர்களிடம் கொடுத்த செல்வாக்கான நபருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், வருமான வரித்துறையினர் விசாரிக்கவுள்ளனர். இவ்வழக்கில், வருமான வரித்துறையினர் நினைப்பது உறுதியானால், வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது.