30ல் லாரி ‘ஸ்டிரைக்’ உறுதி உரிமையாளர்கள் திட்டவட்டம்
‘காலவரையற்ற லாரி ஸ்டிரைக், திட்டமிட்டபடி நாளை மறுநாள் நடைபெறும்; இதில், 135 சங்கங்கள் பங்கேற்கின்றன. எனவே, வதந்திகளை நம்ம வேண்டாம்’ என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உறுதிபட தெரிவித்துள்ளது.
இது குறித்து சம்மேளனத்தின், பொதுச்செயலர் தனராஜ் கூறியதாவது: மத்திய அரசு வாகனங்களுக்கான, மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகையை உயர்த்தியுள்ளதை, திரும்ப பெறுதல் உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தென் மாநிலங்களில், வரும், 30ல் ஸ்டிரைக் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ளது. இது மட்டுமல்லாது, தென் மாநிலங்களுக்கு, லாரிகளை இயக்க வேண்டாம் என, வட மாநிலங்களின் லாரி உரிமையாளர்களுக்கு வேண்டுகோளையும் விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சங்கம், லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக தவறான தகவல்களுடன் வதந்தியை பரப்பி வருகிறது. அதை லாரி உரிமையாளர்கள் யாரும் நம்ப வேண்டாம்.
திட்டமிட்டபடி, நாளை மறுநாள் ஸ்டிரைக் துவங்கும்.
லாரி உரிமையாளர்கள், வட மாநிலங்களுக்கு இயக்கும் லாரிகளை, இன்று முதல் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் லாரிகளை, நாளை நள்ளிரவுக்கு பின் இயக்க வேண்டாம். லாரி ஸ்டிரைக்கில், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைமையில், மாவட்டம், தாலுகாக்களைச் சேர்ந்த, 135 லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
40,000 லாரிகள் நிறுத்தம்
தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர், ராஜவடிவேல் கூறியதாவது:நாளை மறுநாள் துவங்கும் லாரி ஸ்டிரைக்கை முன்னிட்டு, நேற்று முதல் தமிழகம் முழுவதும் வட மாநிலங்களுக்கான லாரி புக்கிங் நிறுத்தப்பட்டது. இதனால், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டில்லி, மேற்கு வங்கம், பீஹார் ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட, 40 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.