ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இனி நண்பர்கள் அல்ல: விராட் கோலி திட்டவட்டம்
ஆஸ்திரேலிய வீர்ர்களுடனான நட்பு மீட்க முடியாத அளவுக்கு இந்தத் தொடரில் சேதம் அடைந்து விட்டது, இனி அவர்கள் நண்பர்கள் அல்ல என்று விராட் கோலி கடுமையாக தெரிவித்துள்ளார்.
முரளி விஜய் தரையில் பட்டு எடுத்த கேட்ச் குறித்து ஸ்மித் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது, ஜடேஜா பேட் செய்த போது அவரை அசிங்கமாக வசை பாடியது தொடர்பாக மட்டுமல்லாமல் இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் நடந்து கொண்டது குறித்து விராட் கோலி கடுமையான கருத்துகளை முன் வைத்துள்ளார்.
தொடருக்கு முன்பாக “ஆஸி.வீரர்கள் எனக்கு களத்திற்கு வெளியே நல்ல நண்பர்கள்” என்று கூறியிருந்தார். இன்று அவர் “இப்போது அந்த எண்ணம் இல்லை. நான் எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் என்பது உறுதி. நான் கூறியது போல் கடுமையாக இரு அணிகளும் மோதும் களத்தில் நாங்களும் போட்டிப் போட்டுத்தான் ஆட முடியும்.ஆனால் அவர்கள் நண்பர்கள் என்ற என் எண்ணம் தவறாகிவிட்டது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர்கள் என் நண்பர்கள் என்று கூறியது தவறு, நான் என் கருத்தை மாற்றிக்கொண்டு விட்டேன். இனி நான் நண்பர்களாக அவர்களைக் கருதுவது கடினம்” என்றார் விராட் கோலி.
ஆஸ்திரேலிய ஊடகங்களின் ஒரு பகுதி விராட் கோலியை ட்ரம்புடன் ஒப்பிட்டு கேலி செய்தது, இவர் அராஜகவாதி என்று வர்ணித்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் நாகரீகமின்றி கோலியின் தோள்பட்டைக் காயத்தை கேலி செய்தனர்.
இந்நிலையில் தொடரை வென்றாலும் அவர்கள் நண்பர்களல்ல என்று ஒரு கேப்டனாக விராட் கோலி தெரிவித்திருப்பது ஆஸ்திரேலிய அணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.