கோடைக்கு முன்பாகவே சென்னை, மும்பை உட்பட 9 நகரங்களில் உக்கிரம் அடைந்த வெயில்: உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்
கோடை தொடங்குவதற்கு முன் பாகவே சென்னை, டெல்லி, மும்பை உட்பட நாடு முழுவதும் 9 நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் இருந்துதான் வெப்ப நிலை அதிகரிக்கும். அதிலும் தமிழ் மாதமான சித்திரையில் கத்திரி பிறந்தவுடன் வெப்பநிலை 100 டிகிரியை கடக்கும். இந்நிலையில் கோடை தொடங்குவதற்கு முன் பாகவே நாட்டின் பல்வேறு நகரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, புனே, சூரத், ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் நகரங்களில் வெப்ப நிலையின் அளவு தினசரி அதிகரித்து வருவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அமெரிக்க பத்திரிகையில் கூறியிருப்பதாவது:
பசுமை குடில்கள் எரிவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பாரிஸ் உடன்பாட்டில் உலக நாடுகள் கையெழுத்திட்டு, புவி வெப்பமயமாதலை 2.0 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப் படுத்த ஒப்புக்கொண்டன. இருந்த போதிலும் இந்த ஆண்டும் உலகம் முழுவதும் 44 நகரங்களில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் அதிகபட்ச வெப்பநிலை கொல்கத்தாவில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
இதற்கிடையே வெயில் கொடுமையால் உயிரிழப்புகள் ஏற் படுவதை தடுக்க போதிய நட வடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் கே.ஜே.ரமேஷ் கூறும்போது, ‘‘மாநில அரசு பிரதிநிதிகளுடன் அண்மையில் ஒரு கூட்டம் நடத்தினோம். அதில் வெயில் கொடுமையால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தினோம். அப்போது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் தமிழக அரசு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
தெலங்கானாவில் மதியம் 1.30 மணிக்குள் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங் களில் வாரம்தோறும் வியாழக் கிழமைகளில் வெப்பநிலை தொடர் பான வானிலை அறிக்கையை வெளி யிடவும் முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், கடலோர ஆந்திரா மற்றும் ஒடிசாவின் சில பகுதி களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கண்டறி யப்பட்டுள்ளது. 2015-ல் இந்தப் பகுதியில் மட்டும் 1,600 பேர் உயிரிழந்தனர். 2016-ல் 700 பேர் உயிரிழந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர் தெலங்கானா, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.