செல்லாத நோட்டை மாற்ற வங்கியில் கூட்டம் ஏன்?
‘செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லாத பலர், விபரம் தெரியாமல் வரிசையில் நிற்பதால், ரிசர்வ் வங்கியில் கூட்டம் அலை மோதுகிறது’ என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அலைமோதும் கூட்டம்:
பழைய, 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின், 2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில், அந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்ற, மத்திய அரசு அனுமதி அளித்தது; அந்த சமயத்தில் வெளிநாடு சென்றிருந்த பலர், ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியவில்லை. அவர்கள் ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களில் பழைய நோட்டுக்களை மாற்ற, மார்ச் 31 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், டில்லி, மும்பை உட்பட, ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
விதிமுறைகள்:
இது குறித்து ராஜ்யசபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த, மத்திய நிதித்துறை இணையமைச்சர், அர்ஜூன் ராம் மெக்வால் கூறியதாவது:செல்லாத நோட்டு அறிவிப்பின் போது, வெளிநாடு சென்றிருந்தவர்கள் உரிய ஆவணங்களை காட்டி, பழைய நோட்டுக்களை மாற்ற, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் தொடர்பாக, விரிவான விளக்கத்தை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
ஆதாரங்கள் இன்றி…
எனினும், ஏராளமானோர், உரிய ஆவணங்கள் இல்லாமலும், வெளிநாடு சென்றதற்கான ஆதாரங்கள் இல்லாமலும், வரிசையில் காத்திருக்கின்றனர். செல்லாத நோட்டுக்களை மாற்ற வாய்ப்பு வழங்கப்படாத பலர் வரிசையில் நிற்பதால், ரிசர்வ் வங்கிகளில் கூட்டம் காணப்படுகிறது. எனவே, உரிய நபர்கள் மட்டுமே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.