ஜடேஜாவை சரமாரியாக ஸ்லெட்ஜிங் செய்த மேத்யூ வேட், ஸ்மித்
நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் இந்திய வெற்றியில் முடிந்தாலும், இருதரப்பினரும் சரமாரியாக ஒருவரையொருவர் ஸ்லெட்ஜிங் செய்த வகையில் மிக மோசமான தொடராக அமைந்தது.
தரம்சலாவில் ஜடேஜா பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கேப்டன் ஸ்மித் இருவரும் அவரை மாறி மாறி கேலி செய்யும் விதமாக ஸ்லெட்ஜ் செய்தனர்,
அது குறித்த வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டம்ப் மைக்ரோ போனில் இந்த வார்த்தைப் பரிமாற்றம் பதிவாகியுள்ளது.
ஆட்டத்தின் திருப்பு முனை இன்னிங்சை (63) ஆடிய ரவீந்திர ஜடேஜா பேட் செய்யும் போது, மேத்யூ வேட், “இந்தியாவுக்கு வெளியே ஏன் அணியில் நீங்கள் சேர்க்கப்படுவதில்லை? ஏன் அது? ஏன் உன்னை இந்தியாவுக்கு வெளியே அணியில் சேர்ப்பதில்லை?” என்று கேலி பேசினார்.
இதற்கு உடனே ஸ்மித், “கொஞ்ச நாட்களுக்கு இதுதான் இவரது கடைசி டெஸ்ட், இதன் பிறகு இந்தியா அயல்நாடு செல்கிறது” என்று கேலி பதில் அளித்தார்.
மேலும் ஸ்மித், “நீங்கள் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் விளையாடத் தகுதியற்றவர், ஏனெனில் நீங்கள் மற்ற இடங்களில் பயனற்றவர்” என்று மேலும் சீண்டினர்.
இது குறித்து இன்று பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஜடேஜா குறிப்பிடும்போது, ‘பின்னாலிலிருந்து வேட் தொடர்ந்து வார்த்தைகளை வீசிக் கொண்டிருந்தார், அது எனது உத்வேகத்தை அதிகரித்தது என்றார்.
முன்னதாக ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் போது ஜடேஜா, மேத்யூ வேடை நோக்கி கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், அதன் அர்த்தம் என்ன என்று வேட் கேட்டதாகவும் ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.