நடிகர் சங்க கட்டிடத்துக்கு மார்ச் 31ம் தேதி அடிக்கல் நாட்டு விழா: செயற்குழு கூட்டத்தில் முடிவு
மார்ச் 31ம் தேதி நடிகர் சங்க கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக தியாகராயநகரில் 19 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் புதிதாக நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்படும் என்று புதிய நிர்வாகிகள் பதிவியேற்றவுடன் அறிவித்தார்கள்.
இக்கட்டிட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதன் மூலம் வந்த தொகை போக, விஷால் – கார்த்தி இருவரும் ஒரு படத்தில் நடித்து, அதன்மூலம் வரும் சம்பளத் தொகையை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுமார் 26 கோடி செலவில் 4 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடமாக அமையவுள்ளது. 1000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், ப்ரிவியூ திரையரங்கம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல அம்சங்கள் இக்கட்டிடத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கட்டிடத்துக்காக தமிழக அரசின் பல்வேறு கட்ட அனுமதிகளைக் கோரியிருந்தது நடிகர் சங்கம். இதில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து கட்டுமான பணிகளைத் தொடங்குவது குறித்து நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சங்கச் செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன்வண்ணன், பிரசன்னா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மார்ச் 31ம் தேதி நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக மாநகராட்சி அனுமதியை பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் 23 திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளை அழைக்கவும் முடிவு செய்துள்ளார்கள்.
தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுமான பணிக்கு ஒவ்வொரு செங்கல் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.